

உத்தர பிரதேசத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் அழுத்தத்தால் வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிஹாரைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக அந்தமான் நிக்கோபார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இரண்டாம் கட்டமாக தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை நடத்தி வருகிறது. இதில், அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட பல்வேறு அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
உத்தர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த விபின் யாதவ் என்ற அரசுப்பள்ளி ஆசிரியர், வாக்குச்சாவடி நிலை அலுவலராக வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் அவர் நேற்று (நவ.25) தனது வீட்டில் திடீரென்று விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். உடனே அவரை அருகிலிருந்த கோனார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் கோண்டா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் அழுத்தம் இருந்ததால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக அவர் இதுகுறித்து பேசிய காணொளி ஒன்றையும் அவரது மனைவி வெளியிட்டுள்ளார். அதில் மாவட்ட துணை ஆட்சியர் மற்றும் வாக்குச்சாவடி அதிகாரி ஆகியோர் தொடர்ந்து அவரைத் துன்புறுத்தியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறர்கள்.
இதற்கிடையில், இதுகுறித்து கோண்டா மாவட்ட ஆட்சியர் பிரியங்கா நிரஞ்சன் செய்தியாளர்களிடம் பேசியபோது சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் எவ்வித அழுத்தமும் இல்லை. சீராகவே சென்று கொண்டிருக்கிறது. காணொளியை வெளியிட்ட இறந்தவரின் மனைவி மீது சந்தேகம் இருப்பதால் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று கூறினார்.
ஏற்கெனவே வக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் அழுத்தம் காரணமாக கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், உத்திர பிரதேசத்திலும் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
A 40-year-old booth-level officer (BLO) in UP’s Gonda district died Tuesday after consuming poison, triggering a storm of allegations and denial.