கெஜ்ரிவால் விவகாரத்தில் கருத்து கூறிய ஜெர்மனிக்கு இந்தியா ஆட்சேபம்!

இதுபோன்ற கருத்துக்கள் எங்களின் நீதித்துறை செயல்பாட்டில் தலையிடுவதாகவும், நீதித்துறையின்....
கெஜ்ரிவால் விவகாரத்தில் கருத்து கூறிய ஜெர்மனிக்கு இந்தியா ஆட்சேபம்!
ANI

தில்லி மதுபானக் கொள்கை வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளது தொடர்பாக ஜெர்மனி கருத்து வெளியிட்டுள்ளதற்கு இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. 

ஜெர்மன் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளரின் கெஜ்ரிவால் குறித்த கருத்து இந்தியாவின் உள்விவகாரங்களில் அத்துமீறி தலையிடுவதாகும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. 

இது தொடர்பாக தில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகம், ஜெர்மன் தூதரக துணைத் தலைவர் ஜார்ஜ் என்ஸ்வீலரை நேரில் அழைத்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. 

இதுபோன்ற கருத்துக்கள் எங்களின் நீதித்துறை செயல்பாட்டில் தலையிடுவதாகவும், நீதித்துறையின் சுதந்திரமான செயல்பாட்டை குறைத்து மதிப்பிடுவது போலவும் உள்ளது என்றும் வெளியுறவுத்துறை ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.

இந்தியா, சட்டத்தின் ஆட்சியுடன் கூடிய வலுவான ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டில் சட்டம் அதன் கடமையைச் செய்யும். இந்த விவகாரத்தில் பாரபட்சமான அனுமானங்கள் தேவையற்றது என்றும் வெளியுறவுத்துறை குறிப்பிட்டுள்ளது.

இந்தியா ஒரு ஜனநாயக நாடாக இருப்பதால் கெஜ்ரிவால் விவகாரத்தில் நியாயமான பாரபட்சமற்ற விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்ப்பதாக ஜெர்மன் வெளியுறவுத்துறை கூறிய சில மணிநேரங்களில் இது தொடர்பான புகார் எழுந்தது.

தில்லி மதுபானக் கொள்கை தொடர்பான முறைகேடு தொடர்பாக கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். அவரை அமலாக்கத்துறை மார்ச் 28 வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in