
இன்று (அக்.20) காலை தலைநகர் தில்லியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து மத்திய அரசின் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் விசாரணை நடத்திவரும் வேளையில், ஆம் ஆத்மியைச் சேர்ந்த முதல்வர் ஆதிஷியும், பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாஸியா இல்மியும் இந்த விவகாரத்தில் பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ளனர்.
இன்று காலை 7.47 மணிக்கு தில்லி பிரசாந்த் விஹார் சாலையில் உள்ள சி.ஆர்.பி.எஃப். பப்ளிப் பள்ளிக்கு வெளியே வெடிகுண்டு வெடித்தது. இதில் அதிஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தில்லி காவல்துறை சிறப்புப் பிரிவு, சி.ஆர்.பி.எஃப்., என்.எஸ்.ஜி. தேசிய விசாரணை முகமை உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் தில்லி குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் முதல்வர் ஆதிஷி பதிவிட்டுள்ளவை பின்வருமாறு:
`ரோஹினியில் உள்ள ஒரு பள்ளிக்கு வெளியே வெடிகுண்டு வெடித்த சம்பவம் தகர்ந்துவிழும் தில்லியின் பாதுகாப்பு அமைப்பை அம்பலப்படுத்துகிறது. தில்லியின் சட்ட ஒழுங்கு பொறுப்பு பாஜகவின் மத்திய அரசு வசம் உள்ளது. ஆனால் இந்த வேலையை விட்டுவிட்டு தில்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பணிகளை தடுப்பதிலேயே பாஜக தனது நேரத்தை செலவிடுகிறது.
இதனால்தான் 1990-களில் மும்பையில் நிலவிய நிழல் உலக காலகட்டத்தைப் போன்ற ஒரு சூழல் தற்போது தில்லியில் நிலவுகிறது. வெளிப்படையாக தில்லியில் தோட்டாக்கள் சுடப்படுகின்றன, குண்டர்கள் பணம் பறிக்கின்றனர் மற்றும் குற்றவாளிகளின் மன உறுதி அதிகரித்துள்ளது.
வேலை செய்யும் எண்ணமோ, திறமையோ பாஜகவிடம் இல்லை. ஒரு வேளை தவறுதலாக தில்லி மக்கள் தில்லி அரசாங்கத்தின் பொறுப்பை பாஜகவிடம் வழங்கினால், தற்போது தில்லியில் உள்ள சட்ட ஒழுங்கு நிலைமையைப் போல பள்ளிகள், மருத்துவமனைகள், மின்சாரம், குடிநீர் வழங்கல் போன்றவற்றையும் அவர்கள் மாற்றிவிடுவார்கள்’ என்றார்.
முதல்வர் ஆதிஷியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள பாஜகவின் தேசிய செய்தித்தொடர்பாளர் ஷாஸிய இல்மி, `பொம்மை முதலமைச்சர் இதற்காகவே அறியப்பட்டவர். அவரை எந்த தலைப்பில் பேச வைத்தாலும், எப்போதும் மத்திய அரசு குறித்தே பேசுவார். தீவிரமான ஒன்று நடைபெற்றிருக்கிறது.
நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டில் உள்ளது. என்ன செய்யவேண்டும் என்பது குறித்து யோசிக்காமல் அரசியல் ரீதியிலான பழி கூறும் ஆட்டம் தொடங்கிவிட்டது. தீவிரமான பிரச்னைகளில் எப்போதும் அரசியல் செய்வது முதிர்ச்சியற்ற மற்றும் பொறுப்பற்ற செயலாகும்’ என்றார்.
தலைநகர் தில்லியின் சட்ட ஒழுங்கைக் கவனிக்கும் தில்லி காவல்துறை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது.