
1966-ல் ஹரியாணா உதயமானதிலிருந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் முதல் கட்சி என்ற பெருமையை பாஜக பெறுகிறது.
ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 5-ல் ஒரேகட்டமாக நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. பெரும்பாலான கணிப்புகள், ஹரியாணாவில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்றும் ஜம்மு-காஷ்மீரில் தொங்கு சட்டப்பேரவை அமையும் என்றும் கணித்திருந்தன.
ஆனால், வாக்கு எண்ணிக்கையில் முடிவுகள் நேர்மாறாக வந்துள்ளன. ஹரியாணாவில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்த நிலையில், தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகித்தது. சுமார் 9.30 மணியளவில் முடிவுகள் அப்படியே மாறத் தொடங்கின.
காங்கிரஸ் படிப்படியாக சரியத் தொடங்கி ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 46-க்கு கீழ் குறைந்தது. பாஜக படிப்படியாக முன்னேற்றம் கண்டது. இந்த முன்னிலை நிலவரம் இறுதிவரை மாறவில்லை.
இறுதியில், பாஜக 48 இடங்களிலும் காங்கிரஸ் 37 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய தேசிய லோக் தளம் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் இருவர் வெற்றி பெற்றுள்ளார்கள்.
இதன்மூலம், ஹரியாணாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியமைக்கிறது. ஹரியாணாவின் வரலாற்றில் எந்தவொரு கட்சியும் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைத்தது கிடையாது.
இந்தத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.