தெலுங்கு தேசம், ஜன சேனாவுடன் கைகோர்க்கும் பாஜக!

தொகுதிப் பங்கீடு குறித்த விவரம் ஓரிரு நாள்களில் முடிவு செய்யப்படும் என கூட்டறிக்கையில் தகவல்.
கடந்த வியாழக்கிழமை அமித் ஷாவைச் சந்தித்த சந்திரபாபு நாயுடு
கடந்த வியாழக்கிழமை அமித் ஷாவைச் சந்தித்த சந்திரபாபு நாயுடுANI

ஆந்திரப் பிரதேசத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் தெலுங்கு தேசம், பாஜக மற்றும் ஜன சேனா கூட்டணி அமைத்துப் போட்டியிட முடிவு செய்துள்ளன.

ஆந்திரப் பிரதேசத்தில் 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 175 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பவன் கல்யாணின் ஜன சேனாவுடன் கூட்டணி அமைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து, சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். இந்தப் பேச்சுவார்த்தையின் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் தெலுங்கு தேசம், பாஜக மற்றும் ஜன சேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, "பாஜக, தெலுங்கு தேசம் மற்றும் ஜன சேனா ஆகிய கட்சிகள் தேர்தல்களில் கூட்டணி அமைத்துப் போட்டியிட முடிவு செய்துள்ளன. ஆந்திரப் பிரதேசம் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்ளது. இந்தியா மற்றும் ஆந்திரம் என இரண்டிலும் வெற்றி பெற வேண்டிய சூழலில் பாஜகவும், தெலுங்கு தேசமும் ஒன்றிணைந்து வருகிறது. மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் இந்தக் கூட்டணி முழுமையாக வெற்றி பெறும்" என்றார்.

இந்த நிலையில், பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜன சேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் கூட்டணி குறித்து கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் இணைந்துப் போட்டியிடுவதாக மூன்று கட்சிகளும் முடிவு செய்துள்ளன. தொகுதிப் பங்கீடு குறித்த விவரம் ஓரிரு நாள்களில் முடிவு செய்யப்படும் என கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு தேசம் கூட்டணியில் பாஜகவுக்கு 5 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளும், ஜன சேனாவுக்கு 24 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 8 மக்களவைத் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in