மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல்: பாஜக கூட்டணி பெரும் வெற்றி | BMC Elections |

மும்பை, புனே, நவிமும்பை உட்பட 25-க்கும் மேற்பட்ட மாநகராட்சிகளைக் கைப்பற்றிய பாஜக...
மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல்: பாஜக அமோக வெற்றி
மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல்: பாஜக அமோக வெற்றி
2 min read

மகாராஷ்டிரத்தின் உள்ளாட்சித் தேர்தலில் மும்பை, புனே, நவிமும்பை உட்பட 25-க்கும் மேற்பட்ட மாநகராட்சிகளில் வெற்றி பெற்று பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.

மகாராஷ்டிராவில் மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்குக் கடந்த ஜனவரி 15 அன்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் நேற்று (ஜன. 16) வெளியாகியுள்ளன.

மும்பையில் பாஜக கூட்டணி வெற்றி

இதில் முக்கியமான மும்பை மாநகராட்சியை பாஜக - ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனா கூட்டணி கைப்பற்றியது. மும்பை, புனே, நாக்பூர் ஆகிய மாநகராட்சிகளில் மொத்தம் 227 வார்டுகள் உள்ளன. இவற்றில், பாஜக 89 வார்டுகளிலும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 29 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் இக்கூட்டணி 118 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மை பெற 114 இடங்கள் தேவை.

செல்வாக்கு சரிந்த சிவசேனா

உத்தவ் தாக்கரே - ராஜ் தாக்கரேவின் சிவசேனா கூட்டணி மொத்தம் 74 வார்டுகளில் வென்றுள்ளது. இதன் மூலம் சுமார் 30 ஆண்டுகளாக மும்பையை வசமாக்கி வைத்திருந்த சிவசேனா குடும்பத்தின் செல்வாக்கு சரிந்துள்ளது. முதன்முறையாக நாட்டின் முக்கிய நகரான மும்பையை பாஜக கைப்பற்றியுள்ளது. குறிப்பாக மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தாராவியில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 4 வார்டுகளிலும் காங்கிரஸ் ஒரு வார்டிலும் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 24 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸுக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

புனேவைக் கைப்பற்றிய பாஜக

புனே மாநகராட்சியில் 165 வார்டுகள் உள்ளன. இதில் பாஜக 90 வார்டுகளில் வெற்றி பெற்று புனே மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. நாக்பூர் மாநகராட்சியின் 151 வார்டுகளில் பாஜக 104 வார்டுகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. தானே மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 131 தொகுதிகளில் பாஜக, ஷிண்டேவின் சிவசேனா கூட்டணி 62 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

பாஜக கூட்டணி வசமான நவி மும்பை

நவி மும்பை மாநகராட்சியில் மொத்தமுள்ள 111 வார்டுகளில், பாஜக 66 வார்டுகளிலும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 42 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன்மூலம், இக்கூட்டணி 108 வார்டுகளில் வெற்றி பெற்று நவிமும்பையை வசமாக்கியுள்ளது. மகாராஷ்டிரத்தின் 29 நகராட்சிகளில் பாஜக 1,372 இடங்களையும் சிவசேனா 394 இடங்களையும், காங்கிரஸ் 315 இடங்களையும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 149 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

பிரதமர் மோடி பெருமிதம்

இதையடுத்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொது நலன் மற்றும் நல்லாட்சிக்கான கொள்கையை மகாராஷ்டிர மக்கள் உற்சாகமாக ஆசீர்வதித்துள்ளனர்!

பல்வேறு நகராட்சித் தேர்தல்களின் முடிவுகள், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் மகாராஷ்டிரா மக்களுக்கும் இடையிலான பிணைப்பு இன்னும் வலுவடைந்துள்ளதைக் காட்டுகின்றன. எங்கள் செயல்திறனின் அனுபவமும் வளர்ச்சியின் தொலைநோக்குப் பார்வையும் மக்களின் இதயங்களைத் தொட்டுள்ளன. மகாராஷ்டிரா மக்கள் அனைவருக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றிக்காக மக்களுடன் இணைந்து இரவு பகல் பாராமல் உழைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொண்டர்கள் ஒவ்வொருவரை நினைத்தும் நான் பெருமிதம் கொள்கிறேன். இந்தத் தேர்தலில் நமது கூட்டணி அடைந்திருக்கும் வெற்றி, எதிரிகளின் பொய் பிரசாரங்களை முறியடித்து, வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு முன்னேறும் நமது நோக்கத்தையும் தெளிவாக எடுத்துரைக்கிறது. வெற்றி பெற்ற அனைவருக்கும் என் இதயப்பூர்வமான வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

Summary

The BJP alliance has won in the local body elections in Maharashtra, winning more than 25 municipal corporations, including Mumbai, Pune, and Navi Mumbai.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in