ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்காக பாஜக தலைமை நிர்வாகி அலிஷா அப்துல்லா, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைப் பாராட்டியுள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஏற்பாட்டில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் நேற்று நிறைவு பெற்றது. தெற்காசியாவில் முதன்முறையாக நடைபெற்ற இரவு நேர சாலை ஃபார்முலா 4 கார் பந்தயம் இது. இந்த கார் பந்தயத்துக்கு அதிமுக, பாஜக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அதிமுக சார்பில் ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவசர வழக்காக விசாரிக்கக் கோரி முறையிடப்பட்டது. இந்தக் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. பாஜக செய்தித் தொடர்பாளர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. எஃப்ஐஏ சர்வதேச அமைப்பின் அனுமதியைப் பெற்று கார் பந்தயத்தை நடத்திக்கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதே சமயம், விளையாட்டு ஆர்வலர்களால் இந்த கார் பந்தயத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இவர்களில் பாஜக தலைமை நிர்வாகி ஒருவரும் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை வரவேற்று விதமாக உதயநிதி ஸ்டாலினைப் பாராட்டியுள்ளார்.
தேசிய கார் மற்றும் பைக் ரேசிங் சாம்பியனும் தமிழக பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலச் செயலாளருமான அலிஷா அப்துல்லா, கார் பந்தயம் தொடங்குவதற்கு முன்பு பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில், கார் பந்தயத்தை நடத்துவதற்காக தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்குப் பாராட்டுகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை எண்ணி பெருமை கொள்கிறேன். இந்த சாலையில் கார் பந்தயம் நடத்துவது எளிதான காரியம் அல்ல, குறிப்பாக சென்னையின் மையப் பகுதியில் இதை நடத்துவது எளிதல்ல. நான் ஒரு ரேசர் என்பதால் எனக்குத் தெரியும். இவையனைத்தையும் தாண்டி கார் பந்தயத்தை நடத்துகிறார்கள். இதற்கு நிச்சயமாக எனது பாராட்டுகள்" என்றார்.
இரு நாள்களும் இளம் வீரர்கள் உற்சாகப்படுத்தும் விதமாக கார் பந்தயம் நடைபெற்ற இடத்திலிருந்து இதற்கு ஆதரவாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார்.
இவர் செப்டம்பர் 22-ல் பாஜகவில் இணைந்தார்.