
பாஜக மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜய் குமார் மல்ஹோத்ரா (93) காலமானார்.
கடந்த சில நாள்களாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை காலமானார்.
ஜன சங்கம் காலத்திலிருந்தே தில்லியில் மிக முக்கியமான முகமான அறியப்படுபவர் விஜய் குமார் மல்ஹோத்ரா. தில்லியிலிருந்து 5 முறை நாடாளுமன்றத்துக்குத் தேர்வாகியுள்ளார். தில்லி சட்டப்பேரவைக்கு இரு முறை தேர்வாகியுள்ளார்.
தில்லி பாஜகவின் முதல் மாநிலத் தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா தான். 1999 மக்களவைத் தேர்தலில் மன்மோகன் சிங்கை பெருமளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து நாடாளுமன்றத்துக்குத் தேர்வானார். 2004 மக்களவைத் தேர்தலில் தில்லியில் 6 இடங்களில் காங்கிரஸ் வென்றபோது, பாஜக சார்பில் தில்லியிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்வான ஒரே உறுப்பினர் விஜய் குமார் மல்ஹோத்ரா.
தில்லியில் பாஜகவின் கட்டமைப்பை வளர்த்ததில் இவருடைய பங்கு மிக முக்கியமானது. இவருடைய மறைவுக்கு தில்லி பாஜக, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரது சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"களத்தில் மிகவும் நெருக்கமாக இருந்த தலைவர விஜய் குமார் மல்ஹோத்ரா. மக்கள் பிரச்னைகள் குறித்து ஆழமான புரிதலைக் கொண்டவர். தில்லியில் கட்சியைப் பலப்படுத்தியதில் முக்கியப் பங்கு வகித்தார். நாடாளுமன்றத்தில் தனது செயல்பாடுகள் மற்றும் பங்களிப்புக்காக விஜய் குமார் மல்ஹோத்ரா என்றும் நினைவில் இருப்பார்" என்று பிரதமர் மோடி தனது இரங்கலில் குறிப்பிட்டுள்ளார்.
Delhi BJP | Vijay Kumar Malhotra |