
உடல்நலக்கோளாறு காரணமாக பாஜக மூத்த தலைவர் அத்வானி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
97 வயதான பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான லால் கிருஷ்ண அத்வானியின் உடல்நிலை நேற்று (டிச.13) இரவு மோசமடைந்ததை தொடர்ந்து, தலைநகர் தில்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
நவம்பர் 8-ல் தனது 97வது பிறந்தநாளை கொண்டாடிய அத்வானி, கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூலையில் இருந்து தற்போது 4வது முறையாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் அத்வானி. இதற்கு முன்பு அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.
1927-ல் லாகூரில் பிறந்த அத்வானி, 1942-ல் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். பிறகு அடல் பிஹார் வாஜ்பாயுடன் இணைந்து பாஜகவை உருவாக்குவதில் முக்கியப் பங்கேற்றிய அத்வானி, அக்கட்சித் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார். 1999-ல் அமைந்த வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் உள்துறை அமைச்சராகவும், துணை பிரதமாகவும் பதவி வகித்துள்ளார்.
நடப்பாண்டின் மார்ச் மாதத்தில், இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னாவை அத்வானிக்கு வழங்கி கௌரவித்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.