
பஞ்சாப் அரசில் செயல்பாட்டில் இல்லாத ஒரு துறைக்கு ஏறத்தாழ 20 மாதங்களாக ஒருவர் அமைச்சர் பொறுப்பு வகித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி அரசை விமர்சித்துள்ளது பாஜக.
கடந்த மார்ச் 2023-ல் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான அரசில் வேளாண் துறை மற்றும் அயலக இந்தியர்கள் விவகாரங்கள் துறையின் கேபினெட் அமைச்சராகப் பொறுப்பேற்றார் குல்தீப் சிங் தலிவால்.
கடந்த கடந்த மே 2023-ல் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் வேளாண் துறைக்கு பதிலாக நிர்வாக சீர்திருத்தத்துறை தலிவாலுக்கு கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிர்வாக சீர்திருத்தத்துறை என்பது செயல்பாட்டிலேயே இல்லாத ஒரு துறை என்ற விஷயம் தற்போது வெளிவந்துள்ளது.
பஞ்சாப் அரசிதழில் நேற்று (பிப்.21) வெளியான ஒரு அறிவிக்கையில்,
`குல்தீப் சிங் தலிவாலுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட நிர்வாக சீர்திருத்தத்துறை செயல்பாட்டில் இல்லை. எனவே, பஞ்சாப் முதல்வரின் பரிந்துரையை ஏற்று, குல்தீப் சிங் தலிவால் வசம் அயலக இந்தியர்கள் விவகாரங்கள் துறை மட்டுமே இருக்கும் என்று பஞ்சாப் ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை முன்வைத்து பஞ்சாப் அரசை விமர்சித்துள்ளது பாஜக. இது தொடர்பாக அக்கட்சியைச் சேர்ந்த கன்சன் குப்தா வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,
`பஞ்சாபில் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் இருந்தார், ஆனால் நிர்வாக சீர்திருத்தத்துறை இல்லை. இதை பற்றித் தெரியாமலேயே இருந்துள்ளது முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு. இதுதான் கெஜ்ரிவால் மாடல்’ என்று விமர்சித்துள்ளார்.