
மக்களவைத் தேர்தலுக்கான 5-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், பிஹார், ஒடிசா, ராஜஸ்தான், ஹரியாணா, மஹாராஷ்டிரம், மேற்கு வங்கம், கேரளம், கர்நாடகம், கோவா, குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், மிசோரம், சிக்கிம், தெலங்கானா, மேற்கு வங்கம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் போட்டியிடுகிறார். இது காங்கிரஸ் வலிமையாக உள்ள தொகுதி. ராமாயணத்தில் ராமர் கதாபாத்திரத்தில் நடித்த மூத்த நடிகர் அருண் கோவில் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இன்று பாஜகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. நவீன் ஜிண்டால் ஹரியாணா மாநிலம் குருஷேத்ராவில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். 2004 மற்றும் 2009 மக்களவைத் தேர்தலில் இதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் நவீன் ஜிண்டால். 2014-ல் பாஜக வேட்பாளர் ராஜ் குமார் சைனியிடம் தோல்வியடைந்தார். 2019 மக்களவைத் தேர்தலில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.