பெண்களுக்கு எதிரான கொடுமைகளை பாஜகவால் மட்டுமே தடுக்க முடியும்: பிரதமர் மோடி

"முதலில் நான் மமதா பானர்ஜிக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்."
பிரதமர் மோடி (கோப்புப்படம்)
பிரதமர் மோடி (கோப்புப்படம்)படம்: https://twitter.com/BJP4India

பெண்களுக்கு எதிரான கொடுமைகளை பாஜகவால் மட்டுமே தடுக்க முடியும் என பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:

"முதலில் நான் மமதா பானர்ஜிக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 2019-ல் இதே மைதானத்துக்கு நான் பிரசாரம் செய்ய வந்தபோது, இந்த மைதானத்தை சிறிதாக்குவதற்காக நடுவில் ஒரு நடை தளத்தைக் கட்டினார். இதற்கு மக்கள் தக்க பதிலடியைக் கொடுப்பார்கள் என அப்போது கூறினேன்.

இந்த முறை அதுமாதிரியான எந்தவொரு விஷயத்தையும் அவர் செய்யவில்லை. இன்றைய பிரசாரத்துக்கு எந்தத் தடங்கலையும் உண்டாக்காத மேற்கு வங்க அரசுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வறுமையை ஒழிக்க வேண்டும் என காங்கிரஸ் பல ஆண்டுகளாக முழக்கங்களை மட்டுமே எழுப்பி வந்தது. கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்துள்ளோம். எங்களுடைய திட்டம் சரியாக இருந்ததாலும், நாங்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதாலும்தான் இது நிகழ்ந்துள்ளது.

இங்கு பெண்களுக்கு எதிராக நிகழும் கொடுமைகளை பாஜகவால் மட்டுமே தடுக்க முடியும். சந்தேஷ்காளியில் குற்றவாளியைப் பாதுகாக்க திரிணமூல் காங்கிரஸ் அரசு எந்த எல்லை வரை சென்றது என்பதை நாடே பார்த்தது. சந்தேஷ்காளி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவருக்குத் தண்டனையை உறுதி செய்வதில் பாஜக உறுதியுடன் இருக்கிறது.

மத்திய அரசின் திட்டங்களை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த திரிணமூல் அரசு அனுமதிக்காது. மருத்துவக் கல்லூரிகளை அமைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் அடையாளமே. நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மருத்துவக் கல்லூரியை அமைக்க வேண்டும். ஆனால், மேற்கு வங்கத்தில் இதை அமல்படுத்த திரிணமூல் காங்கிரஸ் அரசு எங்களை அனுமதிக்காது. மேற்கு வங்கத்துக்கு நிறைய நிதி ஒதுக்கியும்கூட திரிணமூல் காங்கிரஸ் கட்சியால் பல்வேறு திட்டங்கள் உரிய நேரத்தில் முடிவடையாமல் உள்ளன" என்றார் அவர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in