
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகளின் முதல் பகுதியை பாஜக தேசியத் தலைவர் இன்று வெளியிட்டார்.
கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்தில் வாக்குறுதிகளை வெளியிட்டார் ஜெ.பி. நட்டா.
வாக்குறுதிகள் பற்றி பேசிய அவர், "ஊழல் இல்லாத தில்லியாக மாற்ற வேண்டும் என்பதே பாஜகவின் இலக்கு. எங்களுடைய வாக்குறுதிகள் வளர்ந்த தில்லிக்கான அடித்தளம். 2014-ல் 500 வாக்குறுதிகள் அளித்து 499 வாக்குறுதிகளை நிறைவேற்றினோம். 2019-ல் 235 வாக்குறுதிகளை அளித்து 225 வாக்குறுதிகளை நிறைவேற்றினோம். மற்றவையும் அமல்படுத்துவதற்கான நிலையை எட்டியுள்ளன.
தில்லியில் பாஜக அரசு ஆட்சியமைத்தாலும் அனைத்துப் பொதுநல திட்டங்களும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். இந்தத் திட்டங்கள் அனைத்துக்கும் வலிமையூட்டப்படும். ஊழல் இல்லாத திட்டங்களாக அவை மாற்றப்படும்" என்றார் ஜெ.பி. நட்டா.
பாஜக வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள்
தில்லியிலுள்ள பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 வழங்கப்படும்.
ஏழைக் குடும்பங்களுக்கு ரூ. 500-க்கு எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும்.
ஆண்டுதோறும் ஹோலி, தீபாவளி பண்டிகைகளின்போது, ஒரு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்.
பெண்களுக்கு 6 ஊட்டச்சத்து தொகுப்புகள் வழங்கப்படும். கர்ப்பிணிகளுக்கு ரூ. 21 ஆயிரம் வழங்கப்படும்.
60 முதல் 70 வயது வரையிலான மூத்த குடிமக்களின் ஓய்வூதியம் ரூ. 2,000-லிருந்து ரூ. 2,500 ஆக உயர்த்தப்படும்.
முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம் அமல்படுத்தப்படும். ரூ. 5 லட்சத்துக்குக் கூடுதல் சுகாதாரக் காப்பீடு வழங்கப்படும்.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5 அன்று நடைபெறுகிறது. பிப்ரவரி 8 அன்று முடிவுகள் வெளியாகின்றன.
காங்கிரஸ் அளித்த வாக்குறுதியின் விவரங்கள்: இங்கே க்ளிக் செய்யவும்...