மக்களவையில் தகுதி நீக்க தீர்மானம்: பதிலளிக்க மறுத்த ராகுல் | Rahul Gandhi |

பாஜக கொடுக்கும் சொல்லை வைத்துக்கொண்டு உங்கள் நிகழ்ச்சியை நடத்தலாம் என்று பார்க்கிறீர்கள்...
ராகுல் காந்திக்கு எதிராக தகுதி நீக்க தீர்மானம்: பதிலளிக்க மறுத்த ராகுல்
ராகுல் காந்திக்கு எதிராக தகுதி நீக்க தீர்மானம்: பதிலளிக்க மறுத்த ராகுல்ANI
2 min read

ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே மக்களவையில் தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2026 - 27 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தொடர்ந்து பேசி வருகிறார். குறிப்பாக முன்னாள் ராணுவ அதிகாரி மனோஜ் நரவனேவின் புத்தகம், இந்தியா - அமெரிக்கா இடையே போடப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பாஜகவையும் பிரதமர் மோடியையும் விமர்சனம் செய்து வருகிறார்.

மக்களவையில் ராகுல் காந்தியின் உரை

இதற்கிடையில் நேற்று (பிப். 11) மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, அமெரிக்கா இந்தியா மீது விதிக்கும் வரிகளால் அழுத்தப்பட்ட பிரதமர் மோடி, நாட்டை விற்றுவிட்டார் என்று குற்றம்சாட்டினார். மேலும், எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றுள்ள தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆகியோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். அமெரிக்கா பிரதமர் மோடியின் கழுத்தை இறுக்கியதால் அவர் அமெரிக்காவுக்கு நாட்டை ஒப்படைத்துவிட்டார் என்றும் குற்றம்சாட்டினார்.

உரிமை மீறல் நோட்டீஸ்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன் அறிவிப்பின்றி மக்களவையில் முன்வைத்த ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்யப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நேற்று தெரிவித்திருந்தார்.

ராகுல் மீது தகுதி நீக்க தீர்மானம்

இதற்கிடையில் ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே மக்களவையில் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்துள்ளார். அதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- “மக்களவையில் இன்று ராகுல் காந்திக்கு எதிராக தீர்மானம் ஒன்றை முன்மொழிந்துள்ளேன். நாட்டை அழிக்க நினைக்கும் சோரோஸ் போன்றவர்களுடன் சேர்ந்து கொண்டு நாட்டைத் தவறான பாதையில் கொண்டு செல்கிறார். இதனால் ராகுல் காந்தியைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்று முன் மொழிந்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ராகுல் காந்தியின் பதில்

இதுகுறித்து ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:- “நீங்கள் முழுமையாக பாஜகவுக்கு வேலை செய்யவில்லை அல்லவா. அதனால் கொஞ்சமாவது பொதுத்தன்மையுடன் செயல்படுங்கள். இது மிகவும் இழிவான செயல். பொறுப்புள்ள ஊடகமான நீங்கள், பொதுத்தன்மையாக இருக்க வேண்டியது அவசியம். நாள்தோறும் பாஜக சொல்லும் ஒரு சொல்லை வைத்துக்கொண்டு உங்கள் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருப்பது நல்லதல்ல. நீங்கள் நாட்டுக்கு துரோகம் செய்கிறீர்கள். இப்போது எனது இந்தக் கருத்தை நீங்கள் ஒளிபரப்புங்கள்” என்று கூறினார்.

தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

இதற்கிடையில், ராகுல் காந்தி மீது கொண்டுவரப்பட்ட தகுதி நீக்க தீர்மானம் நிறைவேற்றப்படாது. ஆனால் அவர் நாடாளுமன்றத்தில் பேசிய உரையில் சில இடங்களும், அவர் முன் வைத்த குற்றச்சாட்டுகளும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Summary

BJP MP Nishikant Dubey has initiated a formal process seeking to disqualify Congress MP Rahul Gandhi from the Lok Sabha.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in