
மேற்கு வங்கத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடச் சென்ற பாஜக எம்.பி. காகேன் முர்மு மீது ரத்தம் வரும் அளவுக்குக் கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங், ஜல்பைகுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு முதல் மிகக் கனமழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து 160-க்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். படகு மூலம் 105 பேர், ஸிப்லைன் மூலம் 55 பேர் மீட்கப்பட்டார்கள். நிலச்சரிவு காரணமாக 23 பேர் உயிரிழந்தார்கள்.
ஜல்பைகுரியில் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு, மீட்புப் பணிகளை ஆய்வு செய்வதற்காக பாஜக எம்.பி. காகேன் முர்மு இன்று (திங்கள்கிழமை) நேரில் சென்றார். பாஜக எம்எல்ஏ ஷங்கர் கோஷ் உடன் சென்றார். அப்போது உள்ளூர் பகுதி மக்கள் காகேன் முர்மு எம்.பி. மீது மிகக் கடுமையான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். காகேன் முர்மு எம்.பி.யின் கார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தாக்குதலில் படுகாயம் அடைந்த காகேன் முர்மு எம்.பி., ரத்த வெள்ளத்தில் காரில் அழைத்துச் செல்லப்பட்டார். இந்தக் காணொளிகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மீது பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
பாஜக எம்எல்ஏ ஷங்கர் கோஷ் கூறுகையில், "காகேன் முர்மு வாகனத்தில் ரத்த வெள்ளத்தில் இருக்கிறார். காரில் ஒரு கண்ணாடி கூட விட்டுவைக்கப்படவில்லை. கார் முழுக்க உடைந்த கண்ணாடிகளும் கற்களுமாக உள்ளன. மருத்துவச் சிகிச்சைக்காக இந்த இடத்திலிருந்து உடனடியாக வெளியேறுகிறோம்" என்றார் அவர்.
சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும் நேரில் சென்று பார்வையிடவுள்ளார்.
West Bengal | Khagen Murmu | BJP MP | BJP MP Khagen Murmu |