வேளாண் சட்டங்களை திரும்பக் கொண்டுவர வேண்டும் என்று முன்பு தான் பேசியதற்கு கண்டங்கள் எழுந்ததை அடுத்து, அவ்வாறு பேசியதற்கு மன்னிப்பு கேட்டு காணொளி வெளியிட்டுள்ளார் பாஜக எம்.பி. கங்கனா ரனாவத்.
கடந்த செப் 2020-ல் அன்றைய மத்திய அரசு, 3 வேளாண் சட்டங்களை நாடு முழுவதும் அமல்படுத்தியது. இவற்றை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். இந்த சட்டங்களால் தனியார் நிறுவனங்களுக்கு அதிக சாதகங்கள் ஏற்பட்டு, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் இவற்றை ரத்துசெய்ய வேண்டும் என விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.
இதை தொடர்ந்து 2021 டிசம்பரில் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற்றது மத்திய அரசு. இந்நிலையில் `விவசாயிகளுக்கு பயன் தரும் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பக் கொண்டுவர வேண்டும். சில மாநிலங்களில் நடைபெற்ற விவசாய சங்கங்களின் போராட்டத்தால் வேளாண் சட்டங்கள் ரத்துசெய்யப்பட்டன’ என்று நேற்று (செப்.24) ஒரு பேட்டியில் கருத்து தெரிவித்திருந்தார் கங்கனா ரனாவத்.
சமூக வலைதளங்களில் கங்கனா ரனாவத்தின் கருத்துக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதை அடுத்து இந்த விவாகாரம் தொடர்பாக காணொளி வெளியிட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா, `இது கங்கனாவின் தனிப்பட்ட கருத்து, கட்சியின் நிலைபாடு அல்ல. அவரது கருத்தை நாங்கள் நிராகரிக்கிறோம்’ என்றார்.
இந்நிலையில் தன் எக்ஸ் சமூக வலைதள கணக்கில் இன்று (செப்.25) காலை காணொளி வெளியிட்ட கங்கனா ரனாவத், `நான் நடிகை மட்டும் கிடையாது, அரசியல்வாதியாகவும் இருக்கிறேன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். என் எண்ணங்கள் மற்றும் வார்த்தைகள் யாரையாவது புண்படுத்திருக்கும் பட்சத்தில் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் கருத்தை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன’ என்றார்.