கோப்புப்படம்
கோப்புப்படம்

பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் நிதி பத்திரங்கள்: நிர்மலா சீதாராமன்

"தேர்தல் நிதி பத்திரங்கள் இல்லாவிட்டால், நன்கொடைகள் ரொக்கமாக வழங்கப்படுவது அதிகரிக்கும்."

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தேர்தல் நிதி பத்திரங்கள் வேறு வடிவில் மீண்டும் கொண்டுவரப்படலாம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்றுக்கொள்ளும் நடைமுறை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி உச்ச நீதிமன்றம் அதை ரத்து செய்தது. தேர்தல் நிதி பத்திரங்களில் பாஜக பெருமளவில் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன.

தேர்தல் நிதி பத்திரங்கள் உலகளவில் மிகப் பெரிய ஊழல் எனப் பொருளாதார நிபுணரும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பர்கலா பிரபாகர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு அளித்த நேர்காணலில், தேர்தல் நிதி பத்திரங்கள் நடைமுறை மீண்டும் கொண்டுவரப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

"தேர்தல் நிதி பத்திரங்கள் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்துள்ளது. நாங்கள் நிறைய ஆலோசனைகள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அரசியலிலிருந்து கருப்புப் பணத்தை ஒழிக்க, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் வெளிப்படைத்தன்மையைுடன் புதிய வடிவில் கொண்டுவர வேண்டும்" என்றார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில், "தேர்தல் நிதி பத்திரங்கள் இல்லாவிட்டால், நன்கொடைகள் ரொக்கமாக வழங்கப்படுவது அதிகரிக்கும். எனவே, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க தேர்தல் நிதி பத்திரங்கள் சரியான நடைமுறையாக இருக்கும் என்பதை அனைவரும் உணரத் தொடங்கிவிடுவார்கள். எதிர்மறை அம்சங்கள் அனைத்தையும் எளிதில் சரி செய்துவிடலாம்" என்றார்.

தேர்தல் நிதி பத்திரங்கள் நடைமுறை மீண்டும் கொண்டுவரப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "இதற்கென மசோதாவைக் கொண்டுவருவோம் என்றெல்லாம் நாங்கள் கூறவில்லை. அரசியல் கட்சிகளுக்கு ரொக்கமாக நன்கொடைகள் வழங்கும் நடைமுறைக்கு நாங்கள் எதிரானவர்கள். எனவே, இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். அரசியலிலிருந்து கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்பது 2014-ல் பாஜக மற்றும் நரேந்திர மோடியால் கொடுக்கப்பட்ட வாக்குறுதி" என்றார் அமித் ஷா.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in