2024 மக்களவைத் தேர்தல்: பாஜக ரூ. 1,494 கோடி, காங்கிரஸ் ரூ. 620 கோடி செலவு!

கட்சிகளின் தேர்தல் செலவுப் பட்டியலில் விளம்பரச் செலவுகளும், பயணச் செலவுகளும் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளன.
2024 மக்களவைத் தேர்தல்: பாஜக ரூ. 1,494 கோடி, காங்கிரஸ் ரூ. 620 கோடி செலவு!
ANI
1 min read

கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேசிய அளவில் அரசியல் கட்சிகள் செலவு செய்த தொகைகள் அடங்கிய விவரங்களை ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) வெளியிட்டுள்ளது.

18-வது மக்களவைத் தேர்தலில், ரூ. 1,494 கோடியை செலவிட்டு தேசிய அளவில் பாஜக முதலிடத்தைப் பிடித்துள்ளது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 32 தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளும் ஒட்டுமொத்தமாக மேற்கொண்ட தேர்தல் செலவில் இந்த தொகை 44.56% ஆகும்.

பாஜகவை தொடர்ந்து 2-வது இடத்தை காங்கிரஸ் பிடித்துள்ளது. நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் செலவில், 18.5% அதாவது ரூ. 620 கோடியை தேர்தலுக்காக காங்கிரஸ் செலவிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், ஒடிஷா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. மக்களவை மற்றும் 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கும் சேர்த்து இந்த இரு கட்சிகளும், ரூ. 3,352.81 கோடியை செலவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தலை முன்வைத்து வசூலிக்கப்பட்ட மொத்த நிதியில், தேசிய கட்சிகள் ரூ. 6,930.24 கோடியும் (93.08%), மாநில கட்சிகள் ரூ. 515.32 கோடியும் (6.92%) வசூலித்துள்ளன. மிகவும் குறிப்பாக, கட்சிகளின் தேர்தல் செலவுப் பட்டியலில் விளம்பரச் செலவுகளும், பயணச் செலவுகளும் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளன.

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று 90 நாட்களுக்குள்ளாகவும், மாநிலத் தேர்தல் நடைபெற்று 75 நாட்களுக்குள்ளாகும் அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாய செலவு அறிக்கைகளின் அடிப்படையில், இந்தப் பகுப்பாய்வு அறிக்கையை ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in