திசை திருப்பும் முயற்சியில் பாஜக: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியதை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அவர் கூறும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை.
திசை திருப்பும் முயற்சியில் பாஜக: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
1 min read

நாடாளுமன்ற வளாகத்திற்குள் அமைதியான முறையில் நாங்கள் செல்ல முயன்றோம், ஆனால் எங்களை பாஜகவினர் வழிமறித்து, பிரச்னையை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு இடையே இன்று காலை தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது தொடர்பாக விளக்கமளிக்க தில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசியவை பின்வருமாறு,

`இரு அவைகளின் நடவடிக்கைகளையும் நாங்கள் தொந்தரவு செய்ய நினைக்கவில்லை. கடந்த 14 நாட்களாக ஒவ்வொரு நாளும் அதானி விவகாரத்தை முன்வைத்துப் போராடினோம். அம்பேத்கரை அமித் ஷா அவமதித்தார். அதனால்தான் அமித் ஷாவை மன்னிப்பு கேட்கச் சொல்கிறோம்.

அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியதை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அவர் கூறும் குற்றச்சாட்டுகள் துளியும் உண்மையில்லை. நாடாளுமன்ற வளாகத்தில் அமைதியான முறையில்தான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம், ஆனால் ராகுல் காந்தியின் நற்பெயரைக் கெடுக்க பாஜகவினர் சதி செய்கின்றனர் காங்கிரஸ் எம்.பி.க்களை நாடாளுமன்றத்திற்குள் நுழையவிடாமல் பாஜக எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தினர்’ என்றார்.

இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியவை பின்வருமாறு,

`திசை திருப்பும் முயற்சியில் புதிதாக அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அனைத்து எம்.பி.க்களும் அமைதியான முறையில் நாடாளுமன்ற வளாகத்திற்குள் செல்ல முயன்றோம். நாடாளுமன்ற வளாகத்தின் படிகளுக்கு மேல், எங்களுக்கு முன்பு பாஜக எம்.பி.க்கள் நின்று கொண்டிருந்தனர். எங்களது வழியை அவர்கள் மறித்தனர். இது திசை திருப்புவதற்கான புதிய முயற்சி.

நரேந்திர மோடியின் நண்பர் அதானியின் மீது அமெரிக்காவில் வழக்கு உள்ளதை மறைக்க அவர்கள் முயற்சி செய்கின்றனர். இந்தியாவை அதானிக்கு விற்க முயற்சிக்கிறார் மோடி. இதுதான் முக்கியப் பிரச்னை. இது குறித்து விவாதிக்க பாஜக விரும்பவில்லை. பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றின் சித்தாந்தம் அம்பேத்கருக்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிரானது என்பதை நாங்கள் ஆரம்பம் முதலே நாங்கள் கூறி வருகிறோம்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in