
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டை விமர்சித்து தன் எக்ஸ் கணக்கில் அறிக்கை வெளியிட்டுள்ளார் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே. அவர் வெளியிட்ட அறிக்கையின் சுருக்கம் பின்வருமாறு:
`வருடத்துக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் என்ற கோஷத்தைக் கேட்ட இளைஞர்களுக்கு, 10 வருடங்கள் கழித்து சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
(சாமிநாதன் குழு பரிந்துரைத்த) விவசாயிகளுக்கான ஒன்றரை மடங்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, இரட்டிப்பு வருமானம் போன்றவை தேர்தல் மோசடியாக மாறியுள்ளன. ஊரக மக்களுக்கான ஊதியத்தை உயர்த்தும் எண்ணம் இந்த அரசுக்கு இல்லை.
தலித்துகள், ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஊரக ஏழை மக்களுக்காக காங்கிரஸின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியால் செயல்படுத்தப்பட்ட எந்த ஒரு புரட்சிகரமான திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் இல்லை. ஏழை என்ற சொல் சுய தம்பட்டத்துக்கான வழிமுறையாக மாறிவிட்டது. பொருளாதார ரீதியில் பெண்களை முன்னேற்றுவதற்கும், அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதற்கும் எந்தத் திட்டமும் இந்த பட்ஜெட்டில் இல்லை.
துன்பப்படும் ஏழை மக்களிடமிருந்து பணத்தை பிடுங்கி அதிகாரம்மிக்கவர்களிடம் கொடுக்கிறது இந்த அரசு. மே 20, 2024 அன்று மக்களவைத் தேர்தலின் போது, 'எங்களிடம் ஏற்கனவே 100 நாள் செயல் திட்டம் உள்ளது' என்று ஒரு பேட்டியில் கூறினார் பிரதமர் மோடி. இரண்டு மாதங்களுக்கு முன்பு செயல் திட்டம் இருந்தால் அதை பட்ஜெட்டில் அறிவித்திருக்க வேண்டும்.
ஆனால், இந்த பட்ஜெட்டில் எந்தத் திட்டமும் இல்லை, பொதுமக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளில் மட்டுமே பாஜக மும்முரமாக உள்ளது’.