கெஜ்ரிவாலை கொலை செய்யப் பார்க்கிறார்கள்: சுனிதா கெஜ்ரிவால்
திஹார் சிறையில் தனது கணவரைக் கொல்ல சதி நடப்பதாக தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பேசியுள்ளார்.
தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 23 வரை நீட்டித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் ராஞ்சியில் நடைபெற்ற இண்டியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் இண்டியா கூட்டணியில் உள்ள பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய சுனிதா கெஜ்ரிவால், திஹார் சிறையில் தனது கணவரைக் கொல்ல சதி நடப்பதாகப் பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது:
“கெஜ்ரிவாலுக்கு அதிகாரம் மீது ஆசையில்லை, நாட்டுக்காக சேவை செய்ய வேண்டும் என்பதே அவருடைய எண்ணம். அவர் சாப்பிடும் போது கூட கேமராக்கள் இருக்கின்றன. உணவில் கை வைத்தாலே அதிகாரிகள் அவரை கண்காணிக்கிறார்கள். இது மிகவும் கவலைக்குரியது. அவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர். கடந்த 12 ஆண்டுகளாக இன்சுலின் எடுத்துக்கொள்கிறார். ஆனால், சிறையில் அவருக்கு இன்சுலின் மறுக்கப்படுகிறது. அவர்கள் தில்லி முதல்வரைக் கொலை செய்யப் பார்க்கிறார்கள்” என்றார்.