
மஹாராஷ்டிரத்தைத் தொடர்ந்து, பிஹாரிலும் வாக்குகளைத் திருட பாஜக, தேர்தல் ஆணையம் முயற்சித்து வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி ஒடிஷாவில் அரசியலமைப்பைப் பாதுகாப்போம் என்ற பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
"நேற்று நான் பிஹாரில் இருந்தேன். மஹாராஷ்டிரத்தில் வாக்குகள் திருடப்பட்டதைப்போல பிஹாரிலும் வாக்குகளைத் திருடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிஹாரிலும் வாக்குத் திருட்டை நடத்த தேர்தல் ஆணையத்தை அனுமதிக்க மாட்டோம் என இண்டியா கூட்டணித் தலைவர்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்.
ஒடிஷாவில் ஏழைகளிடமிருந்து பறித்து பெரிய நிறுவனங்களுக்கு உதவி வருகிறது பாஜக அரசு. பிஜு ஜனதா தளம் முன்பு என்ன செய்ததோ அதையே தான் பாஜகவும் செய்து வருகிறது. ஒருபுறம் தலித்துகள், ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை உள்ளடக்கிய ஏழைகள். மறுபுறம், 5 முதல் 6 பெரிய நிறுவனங்கள் மற்றும் பாஜக அரசு இருக்கிறது" என்றார் ராகுல் காந்தி.
முன்னதாக, மஹாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் 1 கோடி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார்.