
ரமலான் மாதத்தை முன்வைத்து இஸ்லாமிய அரசு ஊழியர்களுக்கு தெலங்கானா அரசு வழங்கிய பணி நேரச் சலுகைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது பாஜக.
வரும் மார்ச் 31-ல் ரமலான் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதை ஒட்டி, மார்ச் 3 முதல் மார்ச் 31 வரை இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து மாலை நேரங்களில் தொழுகையில் ஈடுபடுவார்கள்.
இந்நிலையில், தெலங்கானா அரசு அலுவலகங்கள், பள்ளிகள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முழு நேர, ஒப்பந்த இஸ்லாமிய ஊழியர்களுக்கு மார்ச் 3 முதல் மார்ச் 31-ம் தேதி வரை மாலை 4 மணிக்குப் பணிகளை முடித்து வீடு திரும்ப அனுமதியளித்து அரசாணை பிறப்பித்துள்ளது தெலங்கானா அரசு.
அதேநேரம், தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டால் மாலை 4 மணிக்குப் பிறகு ஊழியர்கள் பணியைத் தொடரவேண்டும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தெலங்கானா அரசின் முடிவிற்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் அமித் மால்வியா. இது தொடர்பான வெளியிட்ட தன் எக்ஸ் தளப் பதிவில், நவராத்திரி காலத்தில் விரதம் இருக்கும் ஹிந்து அரசு ஊழியர்களுக்கு தெலங்கானா அரசு நேர சலுகை வழங்கவில்லை என்றும், குறிப்பிட்ட ஒரு மதத்தவருக்கு மட்டும் சலுகை வழங்கி வாக்கு வங்கி அரசியலில் காங்கிரஸ் அரசு ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டினார்.
பாஜகவின் குற்றச்சாட்டிற்குப் பதிலளித்துள்ள தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் சையத் நிஸாமுதீன், `மதவாத கருத்துகளைக் கூறுவதே பாஜகவுக்கு வாடிக்கையாகிவிட்டது. நவராத்திரிக்கு 13 நாட்களுக்கு அரசு விடுமுறை வழங்கப்பட்டது. பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வேலையைப் பாஜக செய்துவருகிறது’ என்றார்.