
ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டமசோதாக்கள் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக் கூட்டத்தில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.பி. கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மக்களவைக்கும், மாநில-யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான அரசியலமைப்புச் சட்டதிருத்த மசோதா உள்ளிட்ட 2 மசோதாக்களைக் கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்தார் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்.
எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடும் எதிர்ப்பை அடுத்து இந்த இரு சட்டதிருத்த மசோதாக்களையும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப ஒப்புக்கொண்டது மத்திய அரசு. இதைத் தொடர்ந்து இதற்காக 39 மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களைக் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று (ஜன.8) இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மத்திய சட்ட அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த மசோதாக்களை அறிமுகப்படுத்தியதற்கான நோக்கங்கள் குறித்தும், இதனால் ஏற்படவுள்ள நன்மைகள் குறித்தும் எம்.பி.க்களிடம் விளக்கினார்கள்.
இதில் பங்கேற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.யான சஞ்சய் ஜா, `இந்த சட்ட மசோதாக்களின்படி ஒரு சட்டப்பேரவை அல்லது மக்களவையின் பதவிக்காலத்தின்போது மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசு பலமுறை கவிழ்ந்து தேர்தல்கள் நடைபெற்றால், அதனால் எப்படித் தேர்தலுக்கான செலவு குறையும் எனக் கூறப்படுகிறது?’ என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், ஒரே நேரத்தில் அனைத்து சட்டப்பேரவைகள் மற்றும் மக்களவைக்கு நடத்தப்படும் தேர்தலுக்குத் தேவைப்படும் தளவாடங்கள் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார் சஞ்சய் ஜா. பல மாநில சட்டப்பேரவைகளை முன்கூட்டியே கலைத்துத் தேர்தல் நடத்துவது மூலம் அரசியலமைப்புச் சட்டத்தின் சாராம்சம் மீறப்படுவதாக இந்தக் கூட்டத்தில் குற்றம் சாட்டினார்கள் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்.