
சல்மான் கானைக் கொலை செய்ய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலைச் சேர்ந்த ஒருவர் ரூ. 25 லட்சத்துக்கு ஒப்பந்தம் போட்டதாக நவி மும்பை காவல் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியாணாவில் சுகா என்கிற சுக்பீர் பால்பீர் சிங் என்பவரைக் காவல் துறையினர் இன்று கைது செய்தார்கள். இதன் தொடர்ச்சியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த தோகர் என்பவருடன் சுகா தொடர்பிலிருந்ததாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளார்கள். சல்மான் கானைக் கொலை செய்ய, இவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த ஏகே-47, எம்16 மற்றும் ஏகே92 ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளார்கள்.
நவி மும்பை காவல் துறையினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், சல்மான் கானைக் கொலை செய்வதற்கான திட்டத்தைச் செயல்படுத்த, 18 வயதுக்குக் குறைவானவர்களை ஆள் சேர்ந்ததாக சுகா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 18 வயதுக்கும் குறைவானவர்கள் புனே, ராய்கட், நவி மும்பை, தானே மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.
குற்றப்பத்திரிக்கையில் கூறியுள்ளதுபடி, சல்மான் கானின் நகர்வுகளை சுமார் 60 முதல் 70 பேர் கண்காணித்து வந்துள்ளார்கள். குறிப்பாக பாந்த்ராவிலுள்ள இல்லம், பண்ணை வீடு மற்றும் கொரேகான் திரைப்பட நகரம் ஆகிய இடங்களில் சல்மான் கான் கண்காணிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 2023 மற்றும் ஏப்ரல் 2024 இடையே சல்மான் கானைக் கொல்ல திட்டமிட்டுள்ளார்கள்.
சல்மான் கானைக் கொலை செய்துவிட்டு, இவர்கள் அனைவரும் கன்னியாகுமரியில் சந்தித்து அங்கிருந்து படகு மூலம் இலங்கை தப்பித்துச் செல்லவும், இலங்கையிலிருந்து இந்தியா விசாரணை அமைப்புகளால் எட்ட முடியாத வேறொரு நாட்டுக்குத் தப்பிக்கவும் திட்டமிட்டுள்ளார்கள்.