பதவி நீக்க சட்ட திருத்த மசோதாக்கள் தாக்கல்: நகலை கிழித்து எதிர்க்கட்சிகள் அமளி! | Amit Shah | Lok Sabha

தொடர்ந்து 30 நாட்கள் காவலில் வைக்கப்படும் பிரதமர், முதலமைச்சர்கள் அல்லது மத்திய, மாநில அமைச்சர்கள் 31-வது நாளில் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள்.
மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்த அமித்ஷா
மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்த அமித்ஷாhttps://www.youtube.com/@SansadTV
1 min read

மக்களவையில் இன்று (ஆக. 20) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சர்ச்சைக்குரிய மூன்று மசோதாக்களை தாக்கல் செய்தார். இதன்படி, பிரதமரும், முதலமைச்சர்களும் குற்றவியல் குற்றச்சாட்டுகளின் கீழ் தொடர்ச்சியாக 30 நாள்கள் வரை கைது செய்யப்பட்டிருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்யலாம்.

அரசியலமைப்பு (நூற்றி முப்பதாவது திருத்தம்) மசோதா 2025, யூனியன் பிரதேசங்கள் அரசு (திருத்தம்) மசோதா 2025 மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா 2025 ஆகிய மூன்று மசோதாக்களை மக்களவையில் அமித்ஷா அறிமுகப்படுத்தியபோது, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுந்து நின்று, சட்ட மசோதாக்களின் நகல்களை கிழித்து எறிந்தனர்.

இந்த சட்ட திருத்தங்கள் `கொடூரமானது’ என்று எதிர்க்கட்சிகள் வர்ணித்துள்ளன. குறிப்பாக, எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களை தன்னிச்சையாக கைது செய்வதன் மூலம் ஆட்சியை சீர்குலைக்க இது பயன்படுத்தப்படும் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

சட்ட திருத்த மசோதாக்களை நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பவேண்டும் என்று அமித்ஷா முன்மொழிந்தபோது, திரிணாமுல் எம்.பி. கல்யாண் பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மசோதாக்களின் நகல்களைக் கிழித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நோக்கி வீசினார்கள். காகிதத் துண்டுகள் அவருக்கு அருகில் விழும் காட்சி வெளியானது.

இந்த சட்ட திருத்த மசோதாக்கள் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை முற்றிலும் அழிக்கக்கூடியவை என்று காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி, விமர்சித்தார்.

ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கும் மேற்பட்ட காலம் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ள குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து 30 நாட்கள் காவலில் வைக்கப்படும் பிரதமர், முதலமைச்சர்கள் அல்லது மத்திய, மாநில அமைச்சர்கள் 31-வது நாளில் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள்.

தில்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் தமிழக அமைச்சர் வி. செந்தில் பாலாஜி போன்றவர்கள் சிறையில் இருந்தபோதிலும் பதவியில் தொடர்ந்த சர்ச்சைகளின் பின்னணியில் இத்தகைய சட்ட திருத்த மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

அதேநேரம் அண்மைக் காலமாக மத்திய அமைப்புகள், குறிப்பாக அமலாக்கத் துறையின் நடத்தை குறித்து உச்ச நீதிமன்றம் கடுமையான கவலையை வெளிப்படுத்தியுள்ளது. `அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறுகிறது’ என்றும், `அரசியல் ரீதியிலான சண்டைகளுக்கு அது பயன்படுத்தப்படுவதாகவும்’ உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in