பிஹாரின் முதல் பாஜக முதலமைச்சர்: யார் இந்த சாம்ராட் சௌத்ரி | Samrat Choudhary | Bihar | BJP |

25 ஆண்டுகளுக்குப் பிறகு பிஹார் கண்டிருக்கும் புதிய முதலமைச்சர்... நிதிஷ்குமாருக்கு எதிராகச் சபதம் செய்து தலைப்பாகை அணிந்து கொண்டவர்...
பிஹார் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட சாம்ராட் சௌத்ரி
பிஹார் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட சாம்ராட் சௌத்ரிANI
4 min read

பிஹார் அரசியலில் மீண்டும் ஒரு அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. நீண்ட நாள்களாக எதிர்பார்க்கப்பட்ட அரசியல் நகர்வுகளின் ஒரு பகுதியாக, பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சாம்ராட் சௌத்ரி, பிஹாரின் அடுத்த முதலமைச்சராக ஏப்ரல் 15 அன்று பதவியேற்றுக்கொண்டார். பிஹார் முதலமைச்சர் என்றாலே நிதிஷ் குமார் தான் என்றிருந்த நிலையை மாற்றியிருக்கிறார், சமூக ரீதியான செல்வாக்கும், ஆளுமையும் கொண்ட  தலைவராகப் பார்க்கப்படும் சாம்ராட் சௌத்ரி. இவர் கடந்து வந்த பாதை சுவாரஸ்யங்களால் ஆனது.

சாம்ராட் சௌத்ரியின் பின்னணி

சாம்ராட் சௌத்ரி ஒன்றும் அரசியலுக்குப் புதியவர் அல்ல. அவர் பிறக்கும்போதே அவர் வீட்டில் அரசியல் இருந்தது. பிஹார் அரசியலில் தவிர்க்க முடியாத பெயர் என்றால் அது சகுனி சௌத்ரி. ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான இவர், பிஹார் அரசியலின் ஜாம்பவான் என்று பெயரெடுத்தவர். சுயேச்சையாகக் களமிறங்கி, காங்கிரஸ், சமதா கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், பாஜக எனப் பல கட்சிகளில் கோலோச்சினார் சகுனி சௌத்ரி. பிஹார் சட்டசபையில் பலமுறை சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்துள்ளார். அவருக்கு 1968 நவம்பர் 16 அன்று முங்கர் மாவட்டம் லக்கன்பூர் கிராமத்தில் பிறந்தவர்தான் சாம்ராட் சௌத்ரி.

பிஹாரில் பெரும்பான்மை எண்ணிக்கையில் உள்ள குஷ்வாஹா சமூகத்தில் பிறந்த சாம்ராட் சௌத்ரி, சிறுவயது முதலே அரசியல் சூழலில் வளர்ந்தார். தந்தையின் அரசியல் நிழலில் வளர்ந்த சாம்ராட் சௌத்ரிக்கு, இயல்பாகவே அரசியல் ஞானமும், மக்கள் செல்வாக்கும் இளமைக் காலத்தில் கைகூடியது. ஆனாலும் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்ற துடிப்பும் அவரிடம் நிறைய இருந்தது. இவருக்கும் தமிழ்நாட்டிற்கும் சுவாரஸ்யமான தொடர்பு ஒன்று உண்டு. அது இவரது கல்லூரிப் படிப்பு. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில்தான் தனது முதுகலைப் பட்டத்தைப் பெற்றுள்ளார் சாம்ராட் சௌத்ரி. அண்மையில் நடந்த பிஹார் சட்டமன்ற தேர்தலின்போது கூட அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், இவரது பட்டப்படிப்பு போலியானது என்ற சர்ச்சையைக் கிளப்பியது நினைவிருக்கும்.

அரசியல் பிரவேசம்

சாம்ராட் சௌத்ரியின் அரசியல் பிரவேசம் ஒரு புயலைப் போல இருந்தது. 1990-ல் அரசியலுக்குள் நுழைந்த சாம்ராட் சௌத்ரி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். தீவிர அரசியலில் ஈடுபட்ட அவர், 1999-ல் பர்பத்தா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதே பிஹாரின் விவசாய அமைச்சராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார். வெறும் 25 வயதிலேயே அவர் முன்னாள் முதலமைச்சர் ராப்ரி தேவியின் அமைச்சரவையில் விவசாய அமைச்சராகப் பொறுப்பேற்றார். இது இந்திய அரசியலிலேயே மிக இளம் வயதில் அமைச்சர் பதவியை அலங்கரித்தவர்களில் ஒருவராக அவரை மாற்றியது. இருப்பினும், அவரது வயது குறித்த சர்ச்சைகள் அப்போது எழுந்தன. அவர் அமைச்சராகப் பதவியேற்கத் தேவையான குறைந்தபட்ச வயதை (25 வயது) அடையவில்லை என்று ஒரு சர்ச்சை எழுந்தது, அதன் காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. ஆனால், அந்தத் தொடக்கமே அவர் பிஹார் அரசியலில் முக்கிய திருப்புமுனையாக அமையப்போகிறார் என்பதற்குக் கட்டியம் கூறியது.

 கட்சிகள் மாறிய சாம்ராட் சௌத்ரி

சாம்ராட் சௌத்ரியின் அரசியல் பயணம் ஒரே நேர்க்கோட்டில் அமையவில்லை. அவர் தனது கொள்கைகளுக்காகவும், அதிகாரத்திற்காகவும் பல்வேறு கட்சிகளில் பயணித்துள்ளார். லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியிலிருந்து தனது அரசியல் வாழ்வை தொடங்கினார். அங்குதான் அவர் அமைச்சராகும் வாய்ப்பைப் பெற்றார். ஆனால் அதன்பின்னர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்து நிதிஷ் குமாரின் தலைமையை ஏற்றார். பின்னர் நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அங்கிருந்து வெளியேறினார். 2018-ல் பாஜகவில் இணைந்தார். அதுதான் அவரது அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பாஜகவில் இணைந்த பிறகு, சௌத்ரியின் வளர்ச்சி மிக வேகமாக இருந்தது. கட்சியில் இணைந்த குறுகிய காலத்திலேயே, அக்கட்சியின் மேலிடத்தின் நம்பிக்கையைப் பெற்றார் சாம்ராட் சௌத்ரி. பிஹாரில் பாஜகவை வலுப்படுத்தவும், குறிப்பாக ஓபிசி வாக்குகளை ஒருங்கிணைக்கவும் இவர் ஒரு முக்கிய கருவியாகச் செயல்பட்டார். இதன் விளைவாக, அவர் பிஹார் மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். மாநிலத் தலைவராகப் பதவியேற்ற பிறகு, நிதிஷ் குமாருக்கு எதிராக அவர் மேற்கொண்ட அரசியல் போராட்டங்கள் மிகத் தீவிரமானவை.

தலைப்பாகை சபதம்

சாம்ராட் சௌத்ரியைப் பற்றி பேசும்போது அவர் தலையில் கட்டியிருக்கும் அந்த வண்ணமயமான தலைப்பாகையைப் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. இதற்குப் பின்னால் ஒரு அரசியல் வைராக்கியம் ஒளிந்திருக்கிறது. 2022-ல் பிஹாரின் பிரதான எதிர்க்கட்சியாக பாஜக அமர்ந்தது. அப்போது அதன் தலைவர் சம்ராட் சௌத்ரி. அந்த ஆண்டு நடந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த நிதிஷ் குமார், ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஆர்.ஜே.டியுடன் கைகோத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகினார். இதனால் கடும் கோபமடைந்த சாம்ராட் சௌத்ரி ஒரு சபதம் செய்தார்.

"நிதிஷ் குமாரை முதலமைச்சர் பதவியில் இருந்து தூக்கியெறியும் வரை நான் இந்தத் தலைப்பாகையைக் கழற்ற மாட்டேன்" என்று கூறி தலையில் காவி தலைப்பாகையை அணிந்து கொண்டார். சாம்ராட் சௌத்ரியின் இந்தச் சவால், பிஹார் அரசியலில் பேசுபொருளானது. அவர் சென்ற இடமெல்லாம் அந்தத் தலைப்பாகையுடனேயே காட்சியளித்தார். ஆனால், அரசியல் என்பது விந்தையானது. இன்று அதே நிதிஷ் குமார் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்துவிட்டார். 22 மாதங்கள் தலைப்பாகையுடன் இருந்த சாம்ராட் சௌத்ரி, அதன்பின் ஜனவரி 2024-ல் தன் சபதத்தை முடித்துக்கொண்டு, தனது தலைப்பாகையை அயோத்தி ராமர் பாதத்தில் சமர்ப்பித்தார். அதே நிதிஷ் குமார் ஆட்சியில் துணை முதலமைச்சராகவும் ஆனார். அவருக்கு நிதி, மருத்துவம், பஞ்சாயத் ராஜ், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட முக்கிய துறைகள் கொடுக்கப்பட்டன. பிஹார் முதலமைச்சராக 25 ஆண்டு காலம் இருந்தவரைப் பதவியிலிருந்து நீக்குவேன் என்று சபதமிட்ட சாம்ராட் சௌத்ரிதான் இன்று அம்மாநிலத்தின் முதலமைச்சராகி உள்ளார்.

இவரை ஏன் பாஜக தேர்ந்தெடுத்தது?

பிஹார் அரசியலில் சாதி ஒரு முக்கிய காரணி. சாம்ராட் சௌத்ரி குஷ்வாஹா (மௌரியா) சமூகத்தைச் சேர்ந்தவர். பிஹார் மக்கள் தொகையில் கணிசமான பங்கைக் கொண்டுள்ள இந்தச் சமூகம், தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. நீண்ட காலமாக 'லவ்-குஷ்' (குர்மி மற்றும் குஷ்வாஹா) கூட்டணி நிதிஷ் குமாருக்கு ஆதரவாக இருந்தது. அந்த வாக்குகளைப் பாஜக பக்கம் இழுப்பதில் சாம்ராட் சௌத்ரி முக்கியப் பங்காற்றுகிறார். அவரை மாநிலத் தலைவராக்கியதன் மூலமும், துணை முதலமைச்சராக்கியதன் மூலமும், பாஜக அந்தச் சமூகத்திற்கு ஒரு வலுவான நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. அதன் மூலம் அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் பாஜக தனது செல்வாக்கை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

சாம்ராட் சௌத்ரியை பாஜக தேர்ந்தெடுத்ததைப் பற்றி பிஹாரின் முன்னாள் முதலமைச்சர் ரப்ரி தேவி கருத்து தெரிவித்தபோது, “பாஜக தங்களது முதன்மையான வாக்கு வங்கியான பணியாஸை கைவிட்டு குஷ்வாஹா சமூகத்தின் மீது கவனம் செலுத்த தொடங்கிவிட்டது” என்று சொன்ன விமர்சனம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

நிதிஷ் குமாருக்கு நிகரான தலைவர்

மேலும், பிஹாரில் நிதிஷ் குமாருக்கு இணையாக ஒரு பலமான தலைவரை முன்னிறுத்த வேண்டிய தேவை பாஜகவுக்கு இருந்தது. அதற்கு சாம்ராட் சௌத்ரி சரியான தேர்வாக அமைந்தார். அவரது ஆக்ரோஷமான பேச்சுக்களும், கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமும் பாஜக மேலிடத்தைக் கவர்ந்தது. சாம்ராட் சௌத்ரி சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல, ஒரு சிறந்த நிர்வாகியும் கூட. அவர் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக இருந்தபோது, கிராமப்புற வளர்ச்சியில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். அதிகாரப் பரவலாக்கத்தை உறுதி செய்வதிலும், அடிமட்டத் தொண்டர்களுடன் தொடர்பில் இருப்பதிலும் அவர் வல்லவர். பாஜக அவரை முன்னிறுத்துவதற்கு மற்றொரு காரணம், அவரது ஆக்ரோஷமான அணுகுமுறை. லாலு குடும்பத்தின் அரசியலை விமர்சிப்பதில் அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. அதே சமயம், கூட்டணிக் கட்சிகளுடன் இணக்கமாகச் செயல்படும் பக்குவத்தையும் அவர் வளர்த்துக்கொண்டுள்ளார்.

பிஹாரின் முதல் பாஜக முதலமைச்சர்

பாஜக நினைத்தது வீண் போகவில்லை என்பதைக் காட்டும் வகையில் பிஹார் மாநிலத்தின் முதல் பாஜக முதலமைச்சராக இன்று பதவியேற்றிருக்கிறார் சாம்ராட் சௌத்ரி. நிதிஷ் குமாருக்குக் கௌரவமான அரசியல் ஓய்வைத் தர வேண்டும் என்று முடிவெடுத்த பாஜக, அவரை மாநிலங்களவை உறுப்பினராக்கி, பிஹாரில் தனது புதிய அத்தியாயத்தை இளம் முதலமைச்சரான சாம்ராட் சௌத்ரி மூலம் தொடங்கியுள்ளது. தற்போது, முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சாம்ராட் சௌத்ரிக்கு முன்னால் கூட்டணி கட்சிகளை அரவணைத்துச் செல்வது, பிஹாரின் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது மற்றும் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்குப் பெரும் வெற்றியைப் தேடித்தருவது எனப் பல பொறுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, நிதிஷ் குமார் போன்ற அனுபவம் வாய்ந்த தலைவர்களைச் சமாளித்து ஆட்சியைத் தக்கவைப்பது அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். அதேபோல் பிஹாரில் பிரதானமாக உள்ள தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி.யையும் சமாளிக்க வேண்டிய பொறுப்பு சாம்ராட் சௌத்ரி முன் நிறுத்தப்பட்டுள்ளது. தன் கையில் பிஹாரின் வருங்கால வளர்ச்சி, பாஜகவை உறுதியாக நிறுவும் பொறுப்பு, தனது அரசியல் வளர்ச்சியையும் கவனித்துக்கொள்ளும் கடமை என மூன்றையும் வைத்திருக்கும் சாம்ராட் சௌத்ரி என்னென்ன செய்யப்போகிறார்? பொறுத்திருந்து பார்ப்போம்.

Summary

BJP Leader Samrat Choudhary sworn in as Bihar's New Chief Minister on Wednesday 16th April 2026

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in