வீட்டிலிருந்தபடி இணையவழியில் வாக்களித்த மக்கள்...: இந்தியாவில் முதன்முறை!

ஜூன் 30 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
வீட்டிலிருந்தபடி இணையவழியில் வாக்களித்த மக்கள்...: இந்தியாவில் முதன்முறை!
1 min read

இந்தியாவிலேயே முதன்முறையாக பிஹாரில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் இணையவழியில் வாக்காளர்கள் வாக்களித்துள்ளார்கள்.

பிஹாரில் பாட்னா, கிழக்கு சம்பாரன், ரோஹ்தாஸ், பக்ஸார், பங்கா மற்றும் சரண் மாவட்டங்களிலுள்ள 6 நகராட்சி அமைப்புகளில் 45 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இந்தியாவிலேயே முதன்முறையாக செல்ஃபோன் மூலம் இணைய வழியில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட முதல் தேர்தல் இது.

பிஹார் மாநில தேர்தல் ஆணையர் தீபக் பிரசாத் கூறுகையில், "வாக்குப் பதிவை அதிகரிப்பதே இதன் நோக்கம். இதற்காக இரு செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. முற்றிலும் பாதுகாப்பானவை. வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் இணைய வழியில் வாக்கு செலுத்துவது 'லாக்' செய்யப்படும். மீண்டும் வாக்கு எண்ணிக்கை நாளின்போது தான் இது மீண்டும் 'ஓபன்' செய்யப்படும்" என்றார் அவர்.

இன்று காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இணையவழியில் 67 சதவீதத்தினர் வாக்குப்பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னா குமார் என்பவர் தான் இணையவழியில் வாக்களித்த முதல் ஆண் வாக்காளர். விபா தேவி என்பவர் தான் இணையவழியில் வாக்களித்த முதல் பெண் வாக்காளர். ஜூன் 30 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இணையவழியில் வாக்குச் செலுத்துவது எப்படி?

வாக்காளர்கள் பிளே ஸ்டோரில் உள்ள E-SECBHR செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். செயலில் மொபைல் எண்ணை இணைக்க வேண்டும். சரிபார்த்தல் முடிந்தபிறகு, தேர்தல் நாளன்று செயலி மூலம் வாக்களிக்கலாம். அல்லது பிஹார் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ தளத்தில் வாக்களிக்கலாம்.

வாக்கு முறைகேடுகளைத் தவிர்க்க, ஒரு மொபைல் எண் மூலம் இரு பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் பதிவு செய்வதன் மூலம் வாக்காளர் ஒவ்வொருவரும் சரிபார்க்கப்படுவார்கள்.

இந்த முறை சட்டப்பேரவைத் தேர்தலிலும் கடைபிடிக்கப்படுமா என்பது தெரியாது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in