பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு அனுமதி: தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை குறித்து 3 கேள்விகள் எழுப்பப்பட்டு, தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் - கோப்புப்படம்
உச்ச நீதிமன்றம் - கோப்புப்படம்
2 min read

Bihar Special Intensive Revision Supeme Court: பிஹாரில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கைக்குத் தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதேநேரம் பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள சில மாதங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்படும் இந்த திருத்த நடவடிக்கை குறித்து 3 கேள்விகளை எழுப்பி தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

பிஹார் மாநில வாக்காளர் பட்டியலைத் திருத்த இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

கடந்த 20 ஆண்டுகளில் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அளவிலான இணைப்புகள் மற்றும் நீக்கங்கள் ஆகியவை, போலி வாக்காளர்களின் சாத்தியத்தை அதிகரித்துள்ளதாக இந்த நடவடிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை எதிர்க்கட்சிகளின், குறிப்பாக காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் விமர்சனத்திற்கு உள்ளானது. இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் மீதான விசாரணை இன்று (ஜூலை 10) உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது நீதிபதிகள் சுதன்ஷு துலியா, ஜாய்மல்யா பாக்சி அடங்கிய அமர்வு, `அவர்களை (தேர்தல் ஆணையத்தை) சந்தேகிக்க எங்களுக்கு எந்த காரணமும் இல்லை. வாக்காளர்களின் தகுதிகளை சோதிப்போம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை தேவை. ஜூலை 28 அன்று இது விசாரிக்கப்படும். இதற்கிடையில், அவர்கள் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடமாட்டார்கள்’ என்று கூறினார்கள்.

பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொள்வது குறித்த `கடுமையான சந்தேகங்களை’ உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்தியது.

`உங்கள் (தேர்தல் ஆணையம்) செயல்பாடு பிரச்னையல்ல, ஆனால் நேரம்தான் பிரச்னை... பிஹாரில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை நவம்பரில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுடன் ஏன் இணைக்க வேண்டும்? தேர்தல்களைப் பொருட்படுத்தாமல் ஏன் அதைச் செய்ய முடியாது?’ என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

`இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை நீதிமன்றங்கள் தொடாது... அதாவது, வாக்குரிமை இழந்த ஒருவர் தேர்தலுக்கு முன்பு அதை (திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை) எதிர்த்து வழக்கு தொடர வாய்ப்பில்லை’, என்று நீதிபதி துலியா கூறினார்.

மேலும், `குடிமக்கள் அல்லாத நபர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக தீவிரமான நடவடிக்கை மூலம் வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பதில் எந்த தவறும் இல்லை’ என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

`அவர்கள் (தேர்தல் ஆணையம்) மேற்கொள்வது அரசியலமைப்பின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நடவடிக்கை. இதில் ஒரு நடைமுறை உள்ளது. கணினிமயமாக்கலுக்குப் பிறகு இது முதல் முறையாக நடைபெறுவதால் அவர்கள் தேதியை நிர்ணயித்துள்ளனர். எனவே இதில் நியாயம் உள்ளது’ என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.

மனுதாரர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சங்கரநாராயணன், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை முற்றிலும் தன்னிச்சையானது மற்றும் பாரபட்சமானது என்று குற்றம்சாட்டினார்.

`2003-க்கு முன்பு குடியுரிமை என்ற அனுமானம் உங்களுக்கு (வாக்காளர்கள்) சாதகமாக இருந்தது என்று அவர்கள் (தேர்தல் ஆணையம் தரப்பில்) கூறுகிறார்கள். இருப்பினும், 2003-க்குப் பிறகு, நீங்கள் ஐந்து தேர்தல்களில் வாக்களித்திருந்தாலும், குடியுரிமை என்ற அனுமானம் உங்களுக்கு சாதகமாக இல்லை என்பது முக்கியமல்ல’ என்றார்.

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடவடிக்கையின்போது, வாக்காளர் சமர்ப்பிக்கக்கூடிய 11 ஆவணங்களின் பட்டியலில் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை இடம்பெறாததே இந்த சிறப்பு திருத்த நடவடிக்கை சர்ச்சையானதற்கான காரணம்.

இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடவடிக்கையின்போது ஆதார், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டு ஆகியவற்றை செல்லத்தக்க ஆவணங்களாகக் கருத்தில் கொள்ளுமாறு, இந்திய தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் பிறப்பித்த உச்ச நீதிமன்றம், பின்வரும் மூன்று கேள்விகளை எழுப்பியது,

1)    `சிறப்புத் தீவிர திருத்தத்தை’ நடத்துவதற்கான தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை விளக்கவேண்டும்,

2)    மறுஆய்வு நடைமுறை செல்லத்தக்கதா என்பதை விளக்கவேண்டும் மற்றும்

3)    இந்த நடவடிக்கையின் நேரத்தை விளக்கவேண்டும், அதாவது, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in