
பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் பயங்கரவாதிகள் மாநிலத்திற்குள் நுழைந்தது குறித்து உளவுத்துறையிடம் இருந்து தகவல் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து, கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி பிஹார் மாநில காவல்துறை தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று பயங்கரவாதிகள் நேபாள எல்லை வழியாக பிஹாருக்குள் நுழைந்துள்ளனர் என மாநில காவல்துறை உயரதிகாரிகள் தகவல் தெரிவித்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
பிஹார் மாநில காவல்துறை பகிர்ந்து கொண்ட தகவலின்படி, சந்தேகத்திற்குரிய நபர்கள் ராவல்பிண்டியை சேர்ந்த ஹஸ்னைன் அலி, உமர்கோட்டை சேர்ந்த அடில் ஹுசைன் மற்றும் பஹாவல்பூரைச் சேர்ந்த முகமது உஸ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் அவர்கள் மூவரும் நேபாள தலைநகர் காத்மண்டுவை வந்தடைந்து, கடந்த வாரம் பிஹாருக்குள் நுழைந்ததாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாளத்துடன் எல்லையை கொண்டுள்ள மாவட்ட காவல் அலுவலகங்களுடன் சந்தேகத்திற்குரிய நபர்களின் பாஸ்போர்ட் தொடர்பான விவரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பான கண்காணிப்பை அதிகரிக்கவும், உளவுத்துறை தகவல்களை சேகரிக்கவும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட புலனாய்வுப் பிரிவுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்தும், நடப்பாண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டும், இந்திய-நேபாள எல்லையோர மாவட்டங்களான மதுபனி, சீதாமார்ஹி, சுப்பால், அராரியா, கிழக்கு சம்பாரன் மற்றும் மேற்கு சம்பாரனில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சுமார் 729 கி.மீ. திறந்த எல்லையை நேபாளத்துடன் பிஹார் பகிர்ந்து கொண்டுள்ளது, இதனால் நீண்ட காலமாக எல்லைதாண்டிய ஊடுருவலுக்கான முக்கிய இடமாக அப்பகுதி மாறியுள்ளது.