

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 6 அன்று நடைபெறவுள்ள நிலையில், இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணிக்கு ஓய்ந்தது.
பிஹாரில் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய நாள்களில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 14 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதற்கட்டமாக நவம்பர் 6 அன்று 121 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்), ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா மற்றும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலா 101 இடங்களில் போட்டியிடுகின்றன.
இண்டியா கூட்டணி சார்பில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், விகாஷீல் இன்சான் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. மூன்றாவது அணியாக பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி களம் காண்கிறது.
முதற்கட்ட தேர்தலை முன்னிட்டு எல்லா அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் 121 தொகுதிகளில் கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 60 இடங்களிலும் இண்டியா கூட்டணி 61 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதன்மூலம், முதற்கட்ட தேர்தலில் போட்டியானது மிகக் கடுமையாக உள்ளது.
இதன் காரணமாக, அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வதேரா உள்ளிட்டோர் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்கள். பிரதமர் மோடி மட்டும் 8 பொதுக்கூட்டங்களை நடத்தினார்.
முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (நவம்பர் 6) நடைபெறவுள்ள நிலையில், இதற்கான பிரசாரம் இன்று மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
Bihar Election | Bihar Election 2025 | Campaign |