தேர்தல் பத்திரங்கள் பெயரில் மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலை நடத்திய மோடி: ராகுல் காந்தி

"பெரிய நிறுவனங்களிடமிருந்து மிரட்டிப் பணம் பறிப்பதற்காக சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறை பயன்படுத்தப்பட்டுள்ளன."
தேர்தல் பத்திரங்கள் பெயரில் மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலை நடத்திய மோடி: ராகுல் காந்தி
ANI

தேர்தல் நிதி பத்திரங்கள் என்ற பெயரில் உலகின் மிகப் பெரிய மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலை பிரதமர் நரேந்திர மோடி நடத்தி வந்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

தேர்தல் நிதி பத்திரங்கள் நடைமுறையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்புடைய அனைத்து விவரங்களையும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக் கிணங்க தேர்தல் ஆணையம் இந்தத் தரவுகளை கடந்த வியாழக்கிழமை இணையத்தில் பதிவேற்றம் செய்தது.

இந்தத் தரவுகள் வெளியானவுடன் தேர்தல் நிதி வழங்கிய நிறுவனங்கள் மற்றும் தேர்தல் நிதி பெற்ற கட்சிகளின் பட்டியல் வெளியாகின. அமலாக்கத் துறை, சிபிஐ விசாரணை வளையத்துக்குள் இருக்கும் நிறுவனங்களும் அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுத்தது தரவுகள் மூலம் தெரியவர இது பெரும் விமர்சனத்துக்குள்ளாகின.

தேர்தல் நிதி பத்திரங்கள் நடைமுறை குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பெரிய நிறுவனங்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளதாக சாடியுள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம் தானேவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

"தேர்தல் நிதி பத்திரங்கள் என்ற பெயரில் உலகின் மிகப் பெரிய மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலை நரேந்திர மோடி நடத்தி வந்துள்ளார். இந்திய இறையாண்மையினுடைய அமைப்புகளான அமலாக்கத் துறை, தேர்தல் ஆணையம், சிபிஐ என எதுவுமே இனி தன்னாட்சி அமைப்புகள் அல்ல. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆயுதங்கள்.

இந்த அமைப்புகள் அவர்களுடைய பணியைச் செய்திருந்தால், இப்படியொரு நிலை ஏற்பட்டிருக்காது. பாஜக ஆட்சியிலிருந்து வெளியேறிய பிறகு, இந்த அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையின் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்களைத் துன்புறுத்துவது போன்ற சம்பவங்கள் இனி நிகழாது. இதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.

நாட்டின் அரசியலமைப்பு அமைப்புகளின் கட்டமைப்பையே பாஜக அழித்துவிட்டது. இந்த அரசின் கீழ் நடைபெற்றுள்ள மிகப் பெரிய தேச விரோதச் செயல் இது. பெரிய நிறுவனங்களிடமிருந்து மிரட்டிப் பணம் பறிப்பதற்காக சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறை பயன்படுத்தப்பட்டுள்ளன.

அரசாங்க ஒப்பந்தங்கள் மூலம் வெகுமதி பெறுவதற்கு முன் அவர்கள் ஒப்பந்தம் (அரசியல் மற்றும் தேர்தல் நிதிக்காக) செய்யப்பட்டுள்ளார்கள். தேர்தல் பத்திரங்கள் நாட்டின் அரசியலை சுத்தம் செய்துவிடும் என்ற பிரதமரின் சிந்தனையிலிருந்து உதித்த திட்டம் இது.

இவை எதுவுமே குற்றச்சாட்டுகள் அல்ல, உண்மை. பாஜகவுக்கு நன்கொடை வழங்கிய நிறுவனங்களை உன்னிப்பாகக் கவனித்தால், அமலாக்கத் துறை அல்லது சிபிஐ வழக்குப்பதிவு செய்யும் வரை அந்த நிறுவனங்கள் எதுவும் பாஜகவுக்கு நிதி கொடுக்கவில்லை" என்றார் ராகுல் காந்தி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in