ஒடிஷா முதல்வராக மண்ணின் மைந்தனே பதவியேற்பார்: வி.கே. பாண்டியன்

"ஒடிஷாவிடமிருந்து ரூ. 60 ஆயிரம் கோடியைப் பெற்றுக்கொண்டு, ரூ. 4 ஆயிரம், 5 ஆயிரம் கோடியைத்தான் திருப்பித் தருகிறார்கள்."
வி.கே. பாண்டியன்
வி.கே. பாண்டியன்

ஒடியா மொழி பேசக்கூடிய, ஒடிஷா மக்கள் மனங்களில் வாழ்கின்ற மண்ணின் மைந்தனே ஜூன் 9-ல் ஒடிஷா முதல்வராகப் பதவியேற்பார் என வி.கே. பாண்டியன் தெரிவித்துள்ளார்.

ஒடிஷாவில் மக்களவைத் தேர்தலுடன், சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்று வருவதால் இங்கு பிரசாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் ஒடிஷாவில் தங்களுடைய பலத்தைப் பலப்படுத்த கடுமையாக முயற்சித்து வருகிறார்கள். தேர்தல் பிரசாரங்களில் வி.கே. பாண்டியனைக் குறிவைத்து மோடியும், அமித் ஷாவும் விமர்சித்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒடிஷாவை ஆளலாமா என மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகிறார்கள். இந்த நிலையில், மண்ணின் மைந்தனே ஒடிஷா முதல்வராகப் பதவியேற்பார் என தமிழ்நாட்டைச் சேர்ந்த பிஜு ஜனதா தளத் தலைவர் வி.கே. பாண்டியன் விளக்கமளித்துள்ளார்.

"ஜூன் 9-ல் இந்த மண்ணின் மைந்தன் ஒடிஷா முதல்வராகப் பதவியேற்பார். ஒடியா மொழி பேசக்கூடிய, ஒடிஷா மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிற ஒருவர்தான் ஒடிஷா முதல்வராகப் பதவியேற்பார். ஜூன் 9 காலை 11.30 மற்றும் பகல் 1 மணிக்கு இடையே மண்ணின் மைந்தன் முதல்வராகப் பதவியேற்பார்.

தேசியத் தலைவர்கள் மற்றும் முதல்வர்கள் ஒடிஷாவுக்குத் திரும்பத் திரும்ப வந்தாலும், அது எந்தத் தாக்கத்தையும் உண்டாக்கப்போவதில்லை. காரணம், ஒடிஷாவுக்காக அவர்கள் எதையும் செய்ததில்லை. ஒடிஷாவிடமிருந்து ரூ. 60 ஆயிரம் கோடியைப் பெற்றுக்கொண்டு, ரூ. 4 ஆயிரம், 5 ஆயிரம் கோடியைத்தான் திருப்பித் தருகிறார்கள்.

ஒடிஷா கனிம வளம் நிறைந்த மாநிலம் என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். ஒடிஷாவிலிருந்து நிலக்கரி பெரிதளவில் கிடைக்கிறது. நிலக்கரி மூலம் ரூ. 27,000 - 30,000 ஆயிரம் கோடியை எடுத்துக்கொள்கிறீர்கள். ஒடிஷாவுக்கு வெறும் ரூ. 4,000 கோடியை மட்டுமே கொடுக்கிறீர்கள். கடந்த 20 ஆண்டுகளாக நிலக்கரிக்கான ராயல்டியை ஏன் உயர்த்தவில்லை? காற்று மாசைக் கொடுத்துவிட்டு, லாபங்களை நீங்கள் எடுத்துக்கொள்கிறீர்கள். ஒடிஷா மக்கள் இதைப் புரிந்துகொள்ளும் அளவுக்குப் புத்திசாலிகள்" என்றார் வி.கே. பாண்டியன்.

ஒடிஷாவில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் மே 13 முதல் ஜூன் 1 வரை நான்கு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 2000-வது ஆண்டு முதல் ஒடிஷா முதல்வராக இருக்கக்கூடிய நவீன் பட்நாயக் தொடர்ந்து, 6-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளார். 2019-ல் 146 இடங்களில் 112 இடங்களில் வெற்றி பெற்று பிஜூ ஜனதா தளம் ஆட்சியைத் தக்கவைத்தது. பாஜக 23 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 9 இடங்களில் வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in