தில்லி முதல்வர் அலுவலகத்தில் பகத் சிங், அம்பேத்கர் படங்கள் அகற்றம்: பாஜகவை சாடிய ஆம் ஆத்மி

அவர்களுக்கு பதிலளிப்பது எனது பணி அல்ல. மக்களுக்குப் பதிலளிப்பதே என் பணி.
தில்லி முதல்வர் அலுவலகத்தில் பகத் சிங், அம்பேத்கர் படங்கள் அகற்றம்: பாஜகவை சாடிய ஆம் ஆத்மி
1 min read

தில்லி முதல்வர் ரேகா குப்தாவின் அலுவலகத்தில் இருந்து பகத் சிங், அம்பேத்கர் படங்கள் அகற்றப்பட்டதற்கு ஆம் ஆத்மி கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு அவர் விளக்கமளித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி ஆட்சியின்போது தில்லி முதல்வர் அலுவலகத்தில் அம்பேத்கர், பகத்சிங் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருக்கும் படத்தையும், தற்போது தில்லி முதல்வர் அலுவலகத்தில் மகாத்மா காந்தி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி புகைப்படங்கள் வைக்கப்பட்டிருக்கும் படத்தையும், இன்று (பிப்.24) தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டு அது தொடர்பாக பாஜக மீது குற்றம்சாட்டியிருந்தார் தில்லி எதிர்க்கட்சித் தலைவர் ஆதிஷி.

இது தொடர்பாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அதிஷி கூறியதாவது,

`பாஜகவின் தலித் எதிர்ப்பு மனநிலை முன்பே தெரிந்ததுதான். தலித் எதிர்ப்பு மனநிலைக்கான ஆதாரம் இன்று வெளியாகியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது, தில்லி அரசின் ஒவ்வொரு அலுவலகத்திலும் பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் படங்கள் வைக்கப்பட்டன.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தில்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து இந்தப் படங்கள் அகற்றப்பட்டுள்ளன. இவை மூலம், பாஜகவின் தலித் எதிர்ப்பு மற்றும் சீக்கிய எதிர்ப்பு வெளிப்பட்டுள்ளது’ என்றார்.

அதிஷியின் கருத்துகளை பிரதிபலிக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தன் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது,

`தில்லி பாஜக அரசு பாபாசாகேப் அம்பேத்கர் புகைப்படத்தை அகற்றி, பிரதமர் மோடியும் புகைப்படத்தை வைத்துள்ளது. இது சரியல்ல. பாபாசாகேப்பை பின்பற்றும் லட்சக்கணக்கானவர்களை இது காயப்படுத்தியுள்ளது. பாஜகவிடம் நான் கோரிக்கை வைக்கிறேன். பிரதமரின் புகைப்படம் இருக்கட்டும், ஆனால் பாபாசாகேப்பின் புகைப்படத்தை அகற்றவேண்டாம்’ என்றார்.

ஆம் ஆத்மி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் ஏ.என்.ஐ. செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், முதல்வர் ரேகா குப்தா கூறியதாவது,

`பகத்சிங்கும், பாபாசாகேப்பும் மரியாதைக்குரிய தலைவர்கள். இது தில்லி முதல்வரின் அறை, மேலும் அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் என்ற வகையில் அவர்களுக்கு (குடியரசுத் தலைவர், பிரதமர்) இடமளித்துள்ளோம். அவர்களுக்கு (ஆம் ஆத்மி) பதிலளிப்பது எனது பணி அல்ல. மக்களுக்கு பதிலளிப்பதே எனது பணி’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in