
அசாம் பழங்குடியினருக்கு பாஜக துரோகம் இழைத்துவிட்டதாகக் கூறி, அக்கட்சியிலிருந்து விலகுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜென் கொஹைன் தெரிவித்துள்ளார்.
ராஜென் கொஹைனுடன் மேலும் 17 உறுப்பினர்கள் பாஜகவிலிருந்து விலகியுள்ளார்கள்.
பாஜக மாநிலத் தலைவர் திலிப் சைகியாவிடம் சமர்ப்பித்த ராஜினாமா கடிதத்தில், "கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் கட்சி சார்ந்த அனைத்து பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக விலகுகிறேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்திடம் இவர் பேசுகையில், "அசாம் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற பாஜக தவறிவிட்டது. வெளியாள்களை அசாமில் குடியேற அனுமதித்து பழங்குடியின சமூகங்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டது" என்றார் ராஜென் கொஹைன்.
இவர் 1999 முதல் 2019 வரை நாகான் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்வானார். 2016 முதல் 2019 வரை ரயில்வே இணை அமைச்சராக இருந்தார்.
ஏற்கெனவே, கடந்த 2023 ஆகஸ்டில் இவர் கட்சிக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்திருந்தது பேசுபொருளானது. இவர் முன்பு நாடாளுமன்றத்துக்குத் தேர்வாகியிருந்த நாகான் தொகுதி மறுசீரமைப்பு குறித்து பல்வேறு கருத்துகளை முன்வைத்திருந்ததாகத் தெரிகிறது.
ஆனால், இவை எதற்கும் பாஜக மேலிடத்தில் செவிசாய்க்கவில்லை. அம்மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மாவிடம் பேசியும் பலனில்லை என ராஜேன் கொஹைன் 2023-ல் தெரிவித்திருந்தார். கட்சியின் மாநிலப் பிரிவில் உள்ள யாருக்கும் உச்சபட்ச அதிகாரம் வழங்கப்படக் கூடாது என்று யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் செய்தியாளர்களிடம் கூறிச் சென்றார். இதைத் தொடர்ந்து, அசாம் உணவு மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழகத் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்வதாகவும் அவர் அறிவித்தார்.
Assam | Assam BJP | Rajen Gohain |