என் பேரன் எங்கே?: ஐடி ஊழியரின் தந்தை கதறல்

"எங்களுடையப் பேரனை அவர் (நிகிதா சிங்கானியா) எங்கே வைத்துள்ளார் என்று தெரியவில்லை."
என் பேரன் எங்கே?: ஐடி ஊழியரின் தந்தை கதறல்
படம்: ANI
1 min read

பெங்களூரு ஐடி ஊழியர் அதுல் சுபாஷ் மரண வழக்கில் மனைவி நிகிதா சிங்கானியா கைது செய்யப்பட்ட நிலையில், தன் பேரன் எங்கே என அதுல் சுபாஷ் தந்தை கேள்வியெழுப்பியுள்ளார்.

34 வயது அதுல் சுபாஷ் தனியார் நிறுவனம் ஒன்றில் துணை மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த டிசம்பர் 9 அன்று பெங்களூருவிலுள்ள தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்தார். இவர் உயிரிழப்பதற்கு முன் காணொலி வெளியிட்டது மட்டுமில்லாமல் 24 பக்கத்துக்குத் தற்கொலை கடிதம் எழுதி வைத்துள்ளார்.

இதில் தனது மனைவி மற்றும் மனைவியின் உறவினர்கள் துன்புறுத்தியதாக அதுல் சுபாஷ் எழுதியுள்ளார்.

தன் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் அனைத்தையும் திரும்பப் பெற மனைவி நிகிதா சிங்கானியா ரூ. 3 கோடி கேட்டதாகவும் 4 வயது மகனைக் காண பார்ப்பதற்கான உரிமையாக ரூ. 30 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் நிகிதா சிங்கானியா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாக அதுல் சுபாஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

அதுல் சுபாஷ் மரணத்தைத் தொடர்ந்து, பெங்களூரு நகர காவல் துறையினர் அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்தார்கள்.

இந்த வழக்கில் அதுல் சுபாஷ் மனைவி நிகிதா சிங்கானியா, நிகிதாவின் தாயார் நிஷா சிங்கானியா மற்றும் நிகிதாவின் சகோதரர் அனுராக் சிங்கானியா ஆகியோர் கர்நாடக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மூவரும் கைது செய்யப்பட்ட நிலையில், தனது பேரன் எங்கே என அதுல் சுபாஷ் தந்தை பவன் குமார் மோடி கேள்வியெழுப்பியுள்ளார்.

"எங்களுடையப் பேரனை அவர் (நிகிதா சிங்கானியா) எங்கே வைத்துள்ளார் என்று தெரியவில்லை. என் பேரன் கொலை செய்யப்பட்டானா? அல்லது உயிருடன் இருக்கிறானா? எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. எங்களுடையப் பேரன் எங்களுக்கு வேண்டும். அவன் எங்களுடன் இருக்க வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்ய காவல் துறைக்கு நன்றிகள். நீதிபதியும் கரங்களிலும் கறை படிந்துள்ளது. எனக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதால் எனக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. என்னுடையப் பேரன் பெயரில் எனக்கு எதிராகப் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் இதர தலைவர்களைக் கேட்டுக்கொள்கிறேன், என் பேரன் என்னிடம் வருவதை உறுதி செய்ய வேண்டும். ஒரு தாத்தாவுக்கு மகனைக் காட்டிலும் பேரன் தான் கூடுதல் சிறப்பு.

எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அதுல் சுபாஷின் அஸ்தியைக் கரைக்கப்போவதில்லை" என்றார் பவன் குமார் மோடி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in