நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

அமலாக்கத் துறை, ஜெ.பி. நட்டா, கர்நாடக பாஜக தலைவர், முன்னாள் எம்.பி. நலீன் குமார் ஆகியோரது பெயர்களும் மனுவில் இடம்பெற்றுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

தேர்தல் நிதி பத்திரம் மூலம் பாஜகவுக்காக மிரட்டிப் பணம் பறித்ததாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசால் கடந்த 2017-ல் அறிமுகம் செய்யப்பட்டது தேர்தல் நிதி பத்திரங்கள் நடைமுறை. அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி கடந்த பிப்ரவரியில் உச்ச நீதிமன்றத்தால் இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது.

சமூக செயற்பாட்டாளர் ஆதர்ஷ் ஐயர் என்பவர் தொடர்ந்த வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இவர் தாக்கல் செய்த மனுவில் அமலாக்கத் துறை, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா மற்றும் பாஜக முன்னாள் எம்.பி. நலீன் குமார் ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றுள்ளது.

புகார் மனுவில், "வேதாந்தா, ஸ்டெர்லைட், ஆரோபிந்தோ ஃபார்மா நிறுவனங்களிடமிருந்து தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் மிரட்டிப் பணம் பறிப்பதற்காக நிதியமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அமலாக்கத் துறை மற்றும் மற்ற அரசியலமைப்புப் பதவிகளை வகிப்பவர்களுடன் இணைந்து நிதியமைச்சர் சதித் திட்டம் தீட்டி சோதனைகள் நடத்தியுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி மதுபானக் கொள்கை வழக்கில் ஆரோபிந்தோ ஃபார்மா நிறுவனத்தின் இயக்குநர் சரத் சந்திரா ரெட்டி அமலாக்கத் துறையால் நவம்பர் 11, 2022-ல் கைது செய்யப்பட்டார். நவம்பர் 15, 2022-ல் ஆரோபிந்தோ ஃபார்மா ரூ. 5 கோடி மதிப்புடைய தேர்தல் நிதி பத்திரங்களை வாங்குகிறது. பாஜக நவம்பர் 21-ல் இதை நிதியாக மாற்றிக்கொள்கிறது.

ஜூன் 2023-ல் ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதாக ஒப்புக்கொண்டதையடுத்து, நவம்பர் 2023-ல் ஆரோபிந்தோ ஃபார்மா நிறுவனம் கூடுதலாக ரூ. 25 கோடியை பாஜகவுக்கு நன்கொடையாக வழங்கியது. இந்த நிறுவனம் மொத்தமாக ரூ. 52 கோடிக்கு தேர்தல் நிதி பத்திரங்களை வாங்கியுள்ளது. இதில் ரூ. 34.5 கோடி பாஜகவுக்கும், ரூ. 15 கோடி பாரத் ராஷ்ட்ரி சமிதிக்கும், ரூ. 2.5 கோடி தெலுங்கு தேசம் கட்சிக்கும் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in