
பெங்களூருவில் உள்ள பிரபல காபி ஷாப்பின் கழிவறையில் ரகசிய கேமரா பொருத்திய ஊழியரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவின் பெல் சாலையில் உள்ள பிரபல காபி ஷாப்புக்கு பெண் ஒருவர் சமீபத்தில் சென்றிருக்கிறார்.
இந்நிலையில், காபி ஷாப்பில் உள்ள கழிவறையைப் பயன்படுத்தும் போது, கழிவறையில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிக்குள் செல்போன் மூலம் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், அந்த செல்போன் ஏர் பிளேன் மோடில் இருந்ததாகவும், சரியாக கழிவறை இருக்கையை நோக்கி கேமரா பொருத்தப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனடியாக காபி ஷாப்பின் உரிமையாளரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
இதன் பிறகு அந்த செல்போனின் உரிமையாளர் அதே காபி ஷாப்பில் பணிபுரியும் ஊழியர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அந்த நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் அந்த செல்போனின் கேமரா இரண்டு மணி நேரமாக செயல்பாட்டில் இருந்ததாகவும், சம்பந்தப்பட்ட ஊழியர் இதற்கு முன்பு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதில்லை என்று தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.