
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பாபுசபல்யா என்ற பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த கட்டடம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
பெங்களூருவில் கடந்த 3 நாள்களுக்கும் மேல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளன. கேந்திரியா விஹார் அடுக்குமாடி குடியிருப்பில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அங்கிருந்த குடியிருப்புவாசிகள் படகு மூலம் மீட்கப்பட்டார்கள்.
இதனிடையே, புதிதாகக் கட்டப்பட்டு வந்த 7 அடுக்கு கட்டடம் ஒன்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து வீடியோ நேற்று முழுவதும் இணையத்தில் அதிகளவில் பரவியது.
இந்த விபத்தில் கட்டட இடிபாடுகளில் ஏறத்தாழ 20 பேர் சிக்கியதாக பெங்களூரு கிழக்கு காவல் துணை ஆணையர் தேவராஜா நேற்று தெரிவித்தார். மேலும் சிக்கியவர்கள் 14 தொழிலாளர்கள் மீட்கப்பட்டதாகவும் 5 பேர் இன்னும் காணவில்லை என்றும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
கட்டடம் சரிந்து விழுந்த விபத்துக்கு மழை மட்டுமே காரணம் இல்லை என ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. கட்டுமானப் பணியில் குறைபாடு இருந்ததன் காரணமாகவே கட்டடம் சரிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, கட்டட உரிமையாளர் முனிராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.