
அதானி நிறுவனத்தின் 310 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான மதிப்பிலான 6 வங்கிக் கணக்குகளை சுவிஸ் வங்கி நிர்வாகம் முடக்கியுள்ளது எனத் தகவல் வெளியிட்டது ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம். இதை ஆதாரமற்ற குற்றச்சாட்டாக மறுத்துள்ளது அதானி குழுமம்.
அதானி குழுமம் பண மோசடி, பங்கு பரிவர்த்தனை மோசடியில் ஈடுபட்டதை அடுத்து சுவிட்ஸர்லாந்தின் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் விசாரணை நடத்தி, அதானி குழுமத்தின் 310 மில்லியன் டாலர் மதிப்பிலான 6 வங்கிக் கணக்குகளை முடக்கியது என்று சுவிட்ஸர்லாந்து நாட்டில் செயல்பட்டுவரும் கோதம் சிட்டி என்ற புலனாய்வு இணையதள நிறுவனம் கடந்த 2021-ல் செய்தி வெளியிட்டது.
இந்த செய்தியை நேற்று (செப்.12) தன் அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பகிர்ந்து குற்றம்சாட்டியுள்ளது ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம். இதை அடுத்து இந்தக் குற்றச்சாட்டுக்கு செய்திக்குறிப்பு வழியாக பதில் அளித்துள்ளது அதானி குழுமம்.
அதானி குழுமம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், `ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிராகரிக்கிறோம், மறுக்கிறோம். சுவிஸ் நீதிமன்றத்தின் எந்த ஒரு நடவடிக்கைகளிலும் அதானி குழும நிறுவனங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அபத்தமானது. இது, எங்கள் குழுவின் நற்பெயர் மற்றும் சந்தை மதிப்பிற்கு களங்கத்தை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்ட முயற்சி.
அதானி குழுமம் வெளிப்படைத்தன்மையுடன் அனைத்து சட்ட, ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு இணங்க நடப்பதற்கு உறுதியாக உள்ளது. இந்த முயற்சியை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். இதுபோன்ற செய்தியை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இதை, நீங்கள் தொடர முடிவு செய்தால், எங்கள் அறிக்கையை முழுமையாகச் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.