பிரபல கன்னட பெண் எழுத்தாளருக்கு சர்வதேச புக்கர் பரிசு!

முதல்முறையாக சர்வதேச புக்கர் பரிசு சிறுகதை தொகுப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.
பானு முஷ்டாக் மற்றும் தீபா பஸ்தி
பானு முஷ்டாக் மற்றும் தீபா பஸ்தி
1 min read

தென்னிந்தியப் பெண்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் போராட்டங்களை விவரிக்கும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதப்பட்ட 12 சிறுகதைகளின் தொகுப்பான `ஹார்ட் லாம்ப்’ நூலுக்காக பிரபல கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக் மற்றும் மொழிபெயர்ப்பாளர் தீபா பஸ்தி ஆகியோர் புனைவுக்கான `சர்வதேச புக்கர் பரிசை’ வென்றுள்ளனர்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள டேட் மாடர்னில் நடந்த விழாவில், ஐந்து பேர் கொண்ட தேர்வுக் குழுவின் தலைவரும், சிறந்த விற்பனையாளருக்கான புக்கர் பரிசின் நீண்ட பட்டியலில் இடம்பெற்ற எழுத்தாளருமான மேக்ஸ் போர்ட்டர் நேற்று (மே 20) இந்த விருதை அறிவித்தார்.

இதன்மூலம் முதல்முறையாக சர்வதேச புக்கர் பரிசு சிறுகதை தொகுப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. 2016-ல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இந்த பரிசை வெல்லும் முதல் இந்திய மொழிபெயர்ப்பாளர் பஸ்தி ஆவார். மேலும், இந்த பரிசை வெல்லும் 2-வது இந்திய எழுத்தாளராவார் பானு முஷ்டாக்.

வழக்கறிஞரும், சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான முஷ்டாக் கடந்த மே 18-ல் நடைபெற்ற ஒரு நிகழ்வில் இந்த நூல் குறித்து பேசியதாவது, `மதம், சமூகம், அரசியல் போன்றவை எவ்வாறு பெண்களிடமிருந்து கேள்விக்கு இடமில்லாத கீழ்ப்படிதலைக் கோருகின்றன, மேலும் அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் மீது மனிதாபிமானமற்ற கொடுமைகளைத் தூண்டி, அவர்களை கீழ்ப்படிந்தவர்களாக மாற்றுகின்றன – போன்றவை குறித்தே இந்த கதைகள்’ என்றார்.

இங்கிலாந்து அல்லது அயர்லாந்தில் வெளியாகும் ஆங்கில புனைவு நூல்களுக்கு வழங்கப்படும் புக்கர் பரிசுடன், ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களுக்கான `சர்வதேச புக்கர்’ பரிசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. 50 ஆயிரம் பவுண்ட் பரிசுத் தொகையை நூலாசிரியரும், மொழிபெயர்ப்பாளரும் பகிர்ந்துகொள்வார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in