
வங்கதேச தலைமை ஆலோசகராக உள்ள முஹமது யூனுஸ் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
வங்கதேசத்தில் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற பேராசிரியர் முஹமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. இவர் பிரதமர் மோடியை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். பிரதமர் மோடி எக்ஸ் தளப் பக்கத்தில் உரையாடல் குறித்து பதிவிட்டுள்ளார்.
"வங்கதேச தலைமை ஆலோசகர் பேராசிரியர் முஹமது யூனுஸிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. இருவரும் தற்போதைய சூழல்கள் குறித்து பார்வைகளைப் பரிமாறிக்கொண்டோம். ஜனநாயகம், நிலைத்தன்மை, அமைதி மற்றும் வளர்ச்சி மிகுந்த வங்கதேசத்துக்கான இந்தியாவின் ஆதரவைத் தெரிவித்தேன். வங்கதேசத்திலுள்ள ஹிந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று முஹமது யூனுஸ் தெரிவித்தார்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
"வளர்ச்சிக்கான பல்வேறு முன்னெடுப்புகள் மூலம் வங்கதேச மக்களுக்கு உதவ இந்தியா உறுதிகொண்டிருப்பதாக பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். வங்கதேசத்தில் உள்ள அனைத்து சிறுபான்மையினர் மற்றும் ஹிந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதே இடைக்கால அரசின் முன்னுரிமையாக இருக்கும் என முஹமது யூனுஸ் உறுதியளித்துள்ளார்.
இரு நாடுகளின் உறவுகளை முன்னெடுத்துச் செல்வது குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தனார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் பெரும் கிளர்ச்சியாக மாறியது. அந்த நாட்டுப் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறினார். தற்போது இந்தியாவில் தற்காலிகமாக உள்ளார்.