
சட்டவிரோத குடியேற்றவாசிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் தொடர்பான முதல் தகவல் அறிக்கைக்காக `வங்கதேச மொழியில்’ எழுதப்பட்ட ஆவணங்களை மொழிபெயர்க்க உதவி கோரி, புது தில்லியின் லோதி காலனி காவல் நிலையத்தில் இருந்து `பங்கா பவனுக்கு’ (மேற்கு வங்க அரசு இல்லம்) அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாக பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
வங்காள மொழியை `வங்கதேச மொழி’ என்று குறிப்பிடுவது வங்காளத்தை அவமதிக்கும் செயல் என்று கூறி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இதற்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
லோதி காலனி காவல் நிலைய ஆய்வாளர் அனுப்பிய கடிதத்தில், `இந்தியாவில் சட்டவிரோதமாக வசிக்கும் வங்கதேச நாட்டவர் என்று கடுமையாக சந்தேகிக்கப்படும் எட்டு பேர் சம்பந்தப்பட்ட வழக்குக்கான ஆவணங்களை மொழிபெயர்க்க தில்லி காவல்துறைக்கு வங்கதேச தேசிய மொழியில் தேர்ச்சி பெற்ற ஒரு மொழிபெயர்ப்பாளர் தேவை’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தை கையிலெடுத்த மமதா பானர்ஜி உள்பட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பலரும், நேற்று (ஆக. 3) மாலை முதல் மன்னிப்பு கேட்கும்படி தில்லி காவல்துறையிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
ஒரு காவல் ஆய்வாளர் வழங்கிய வாய்ப்பைக் கையிலெடுத்து மமதாவும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் அரசியல் செய்துவருவதை முறியடிக்க வங்காள பேச்சுவழக்குகள் குறித்த தகவல்களை பாஜக தலைவர் அமித் மாளவியா தெரிவித்தார். குறிப்பாக, வங்கதேசத்திலும் மேற்கு வங்கத்திலும் பேசப்படும் வங்காள மொழி வேறுபட்டது என்று அவர் வாதிட்டார்.
வங்காள மொழியின் பேச்சுவழக்குகளில் மாளவியா கவனம் செலுத்தினார், ஆனால் சந்தேகத்திற்குரிய வங்காளதேச சட்டவிரோதக் குடியேற்றவாசிகளிடம் இருந்து மீட்கப்பட்ட ஆவணங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது வங்காள மொழியின் எழுத்துரு மட்டுமே என்ற விஷயத்தை அவர் தவறவிட்டார்.
வங்காள மொழியில் ஏராளமான பேச்சுவழக்குகள் இருந்தபோதிலும், வங்காள மொழியில் எழுத இந்தியா மற்றும் வங்காளதேசம் முழுவதும் ஒரே மாதிரியான எழுத்துரு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.