
ஆர்எஸ்எஸ் (ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்) அமைப்பில் இணையவும், அதன் நடவடிக்கைகளில் பங்கேற்கவும் அரசுப் பணியாளர்களுக்கு இருந்த தடையை விலக்கியது மத்திய அரசு. மத்திய அரசின் இந்தத் தடை விலக்க நடவடிக்கையை இன்று (ஜூலை 22) வரவேற்றுள்ளது ஆர்எஸ்எஸ் அமைப்பு.
கடந்த ஜூலை 9-ல் அரசுப் பணியாளர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைய அமலில் இருந்த தடையை விலக்கி அரசணை பிறப்பித்தது மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்.
`கடந்த 99 வருடங்களாக தேசத்தின் மறுசீரமைப்பிலும், சமூகத்துக்காகவும் உழைத்துள்ளது ஆர்எஸ்எஸ். அரசு ஊழியர்களை சங்க செயல்பாடுகளில் ஈடுபட இந்திய அரசு அனுமதித்திருப்பது சரியான முடிவு. இது ஜனநாயகத்தை வலுப்படுத்தும்’ என்று கருத்து தெரிவித்துள்ளார் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேத்கர்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், `ஆர்எஸ்எஸ் ஒரு தேசியவாத அமைப்பு. அரசியல் காரணங்களுக்காக அரசுப் பணியாளர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர 1966-ல் தடை விதித்தது அன்றைய காங்கிரஸ் அரசு. தேசியவாத அமைப்புகள் மீது காங்கிரஸுக்கு எதிர்மறை எண்ணங்கள் இருக்கிறது’ என்றார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் `மகாத்மா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து பிப்ரவரி 1948-ல் ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தடை செய்தார் சர்தார் படேல். பிறகு தடை விலக்கப்பட்டாலும் நாக்பூர் அலுவலகத்தில் மூவர்ணக் கொடி பறக்கவில்லை. இந்த 58 வருடத் தடை வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்திலும் அமலில் இருந்தது. இதனால் அரசுப் பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள்’ என்றார்.