வயநாட்டில் விஞ்ஞானிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது கேரள அரசு
ANI

வயநாட்டில் விஞ்ஞானிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது கேரள அரசு

சூரல்மலையையும், முண்டக்கையையும் இணைக்கும் வகையில் ஆற்றுக்கு மேலே இந்திய ராணுவத்தால் தற்காலிக பெய்லி இரும்புப் பாலம் கட்டப்பட்டது
Published on

கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை அடுத்து அங்கே விஞ்ஞானிகள் கள ஆய்வு மேற்கொள்ள வரக்கூடாது என்று முன்பு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியுள்ளது அம்மாநில அரசு.

வயநாட்டில் கடந்த ஜூலை 30 அதிகாலை 2 மணி அளவில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. ஆகஸ்ட் 2 காலை நிலவரப்படி, நிலச்சரிவில் சிக்கி 300-க்கும் மேற்பட்ட பொது மக்கள் மரணமடைந்துள்ளதாகவும், 240 நபர்களைக் காணவில்லை என்றும் கேரள அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ந்து நான்காவது நாளாக வயநாட்டில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நேற்று (ஆகஸ்ட் 1) சூரல்மலையையும், முண்டக்கையையும் இணைக்கும் வகையில் ஆற்றுக்கு மேலே இந்திய ராணுவத்தால் தற்காலிக பெய்லி இரும்புப் பாலம் கட்டப்பட்டது. இதனால் முண்டக்கை பகுதிக்கு நேற்றிலிருந்து ஜேசிபி போன்ற கனரக வாகனங்கள் செல்ல ஆரம்பித்தன. இதனால் மீட்புப் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் இன்று (ஆகஸ்ட் 2) வயநாட்டில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட வயநாடு பகுதியில் விஞ்ஞானிகள் கள ஆய்வு மேற்கொள்ள அம்மாநில அரசின் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மை செயலர் முன்பு தடை விதித்திருந்தார். முறையாக மாநில அரசிடம் அனுமதி பெற்ற பிறகே பாதிப்புகளை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அந்தத் தடை உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் கேரள அரசின் இந்தத் தடைக்கு உத்தரவுக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இதை அடுத்து கள ஆய்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை கேரள அரசால் நீக்கப்பட்டது.

logo
Kizhakku News
kizhakkunews.in