
ஜெயா ஷெட்டி கொலை வழக்கில் பிரபல நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது மும்பை உயர் நீதிமன்றம்.
மும்பையில் உள்ள கோல்டன் க்ரௌன் ஹோட்டலின் உரிமையாளர் ஜெயா ஷெட்டியை, கடந்த 2001-ல் ஹோட்டல் வளாகத்திலேயே வைத்து சோட்டா ராஜனின் அடியாட்கள் கொலை செய்தனர். ஜெயா ஷெட்டியிடம் பணம் கேட்டு சோட்டா ராஜன் ஆட்களிடம் இருந்து தொடர்ச்சியாக அவருக்கு மிரட்டல் அழைப்புகள் விடுத்தது, இந்தக் கொலை வழக்கு விசாரணையின்போது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து, மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் கடந்த மே 30-ல் சோட்டா ராஜனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இந்நிலையில் இந்த வழக்கில் சோட்டா ராஜனுக்கு ஜாமின் வழங்கியும், ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்தும் மும்பை நீதிமன்ற அமர்வு இன்று (அக்.23) உத்தரவிட்டுள்ளது.
ஜெயா ஷெட்டி கொலை வழக்கில் ஜாமின் கிடைத்தாலும், பத்திரிக்கையாளர் ஜோதிர்மய் தே கொலை வழக்கில் 2011-ல் ஆயுள் தண்டனை பெற்றிருப்பதால் சோட்டா ராஜன் சிறையில் இருந்து வெளிவரமுடியாத நிலை உள்ளது. அத்துடன் சோட்டா ராஜன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
64 வயதான சோட்டா ராஜன் முன்பு மும்பையில் செயல்பட்டுவந்த மாஃபியா கும்பல்கள் ஒன்றின் தலைவராக இருந்தார். 1980-களில் படா ராஜன் மாஃபியா கும்பலில் இணைந்த சோட்டா ராஜன், பிறகு தாவூத் இப்ராஹிம் கும்பலில் இணைந்தார். 1989-ல் இந்தியாவில் இருந்த வெளியேறி துபாய், இந்தொனேசியா உள்ளிட்ட நாடுகளில் சுமார் 27 வருடங்கள் தஞ்சமடைந்திருந்தார் சோட்டா ராஜன்.
கடந்த 2015-ல் இந்தொனேசியாவின் பாலியில் கைது செய்யப்பட்டு, இன்டர்போல் உதவியுடன் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார் சோட்டா ராஜன். தற்போது திஹார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.