பில்கிஸ் பானு வழக்கு: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எப்படிப் புரிந்துகொள்வது? - பத்ரி சேஷாத்ரி

இதுதான் நிலை. உங்களுக்குச் சார்பான அரசு ஆட்சியில் இருந்தால், ஆயுள் தண்டனை குறைக்கப்பட்டு...
பில்கிஸ் பானு வழக்கு: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எப்படிப் புரிந்துகொள்வது? - பத்ரி சேஷாத்ரி
ANI
2 min read

குஜராத்தில் கோத்ரா என்ற இடத்தில் 2002-ம் ஆண்டு ரயில் பெட்டி ஒன்று பற்றி எரிந்து, அதில் இருந்த பல அயோத்தி ராமர் கோவில் கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து குஜராத் முழுதும் இந்துக்குகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பெரும் கலவரம் வெடித்து பலர் கொல்லப்பட்டனர். அதில் முஸ்லிம்களே பெரும்பான்மையாகப் பாதிக்கப்பட்டனர். பல கொலை, கொள்ளை, வன்புணர்வு சம்பவங்களில் மிக மோசமானது, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணிப் பெண் மீதான கூட்டுப் பாலியல் தாக்குதல்.

பில்கிஸ் பானுவைத் தாக்கியவர்கள்மீது வழக்குகூடப் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் அவருடைய தொடர் முயற்சியினால் உச்ச நீதிமன்றம், சிபிஐ இந்த வழக்கை எடுத்துக்கொள்ளுமாறு ஆணையிட்டது. இந்த வழக்கையும் குஜராத்தில் அல்லாது மஹாராஷ்டிரத்தில் நடத்த வகை செய்தது. மும்பை நீதிமன்றம் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை அளித்தது. இதனை மும்பை உயர்நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. பில்கிஸ் பானுவுக்கு நஷ்ட ஈடு தரவும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.

2022-ம் ஆண்டு, பில்கிஸ் பானு வழக்கின் 11 குற்றவாளிகளும், 14 வருட சிறைத்தண்டனை முடிவுற்றதால், தண்டனைக் குறைப்பு வேண்டி குஜராத் அரசிடம் விண்ணப்பித்தனர். குஜராத் அரசும் அவர்களை விடுதலை செய்தது. இதனை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றம் சென்றார். உச்சநீதிமன்ற அமர்வு, தெளிவான பதிலைக் கொடுக்காமல், டெக்னிக்கல் காரணங்களைக் காட்டி, குஜராத் அரசுக்கு இந்த தண்டனைக் குறைப்பைச் செய்ய அனுமதி இல்லை என்றும் 11 பேரும் மீண்டும் சிறை செல்லவேண்டும் என்றும், இந்த வழக்கை நடத்தியது மஹாராஷ்டிர அரசு என்பதால் 11 பேரும் மஹாராஷ்டிர அரசிடமே தண்டனைக் குறைப்புக்கு விண்ணப்பிக்கவேண்டும் என்றும் தீர்ப்பு அளித்துள்ளது.

* பொதுவாக ஆயுள் தண்டனை பெறுவோர், 14 ஆண்டுகள் கழித்து தண்டனைக் குறைப்பு என்பதற்காக விண்ணப்பிப்பர். மாநில அரசுகள் தண்டனையைக் குறைத்து அவர்களை விடுதலை செய்யலாம். இதனால் ஆயுள் தண்டனை என்றாலே 14 ஆண்டுகள் என்ற கருத்து மக்களிடையே நிலவுகிறது. இதில் உண்மை இல்லை. பல ஆயுள் தண்டனைக் கைதிகள் தொடர்ந்து சிறையிலேயே இருக்கிறார்கள்.

* தண்டனைக் குறைப்பு குறித்து இந்தியாவில் பல மாநில அரசுகள் பக்கச்சார்புடன் நடந்துகொண்டுள்ளன. கொடூரக் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், பாலியல் தாக்குதல் செய்வோர் ஆகியோருக்கு 14 ஆண்டுகள் அல்லது அதற்குச் சற்று அதிகமான காலம் கடந்து தண்டனைக் குறைப்பு (ரெமிஷன்) தரப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படுவது நடந்துகொண்டே இருக்கிறது.

* ஓர் உதாரணம், ராஜிவ் காந்தி கொலை வழக்குக் குற்றவாளிகள். பேரறிவாளன் உட்பட்ட சிலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தமிழக சட்டமன்றத்தில், அஇஅதிமுக, திமுக இரு கட்சிகளுமே மசோதாக்களை நிறைவேற்றி பேரறிவாளனையும் பிற தண்டனைக் கைதிகளையும் விடுவிக்கக் கோரின. மத்திய அரசு இதனைக் கடுமையாக எதிர்த்தது. பின்னர் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, 30 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்தது.

* 2000-மாவது ஆண்டில் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை தரப்பட்டது. இதனை எதிர்த்து அஇஅதிமுக தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். தர்மபுரியில் ஒரு பேருந்து எரிக்கப்பட்டு மூன்று மாணவிகள் கருகி இறந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று அஇஅதிமுகவினருக்கு 2007-ல் மரண தண்டனை வழங்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் இதனை உறுதி செய்தது. 2016-ல் உச்ச நீதிமன்றம் இந்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. 2018-ல் இந்தக் குற்றவாளிகள் மூவரும் தண்டனைக் குறைப்பு கோரி விண்ணப்பித்தனர். அஇஅதிமுக அரசு இவர்கள் மூவரையும் விடுதலை செய்தது.

* இதுதான் நிலை. உங்களுக்குச் சார்பான அரசு ஆட்சியில் இருந்தால், ஆயுள் தண்டனை குறைக்கப்பட்டு, விடுதலை கிடைக்கும். இல்லையென்றால் சிறையிலேயே இருக்கவேண்டியதுதான்.

* இப்போதுகூட உச்ச நீதிமன்றம் இந்த 11 பேரும் உயிர் போகும்வரை சிறையில் இருக்கவேண்டும் என்று சொல்லவில்லை. இவர்களை விடுதலை செய்யும் உரிமை குஜராத் அரசுக்கு இல்லை என்றுதான் சொல்கிறது.

* ஆனால் தற்போதைய மஹாராஷ்டிர அரசும் பாஜக கூட்டணி அரசுதான். அவர்கள் இந்த 11 பேரையும் விடுதலை செய்தால் அப்போது உச்ச நீதிமன்றம் என்ன செய்யும்?

* ஒரே வழி, ஆயுள் தண்டனை என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லாமல், இத்தனை ஆண்டுகள் சிறைத்தண்டனை என்றும், அது குறைக்கப்படலாமா கூடாதா என்றும் நீதிமன்றங்கள் தெளிவான தண்டனை தருவதுதான் ஒரே வழி. மேலும் தண்டனைக் குறைப்பை நீதிமன்றம் மட்டுமே கையாள முடியும், மாநில, மத்திய அரசுகளுக்கு இதில் உரிமை இல்லை என்று தெளிவான சட்டத்திருத்தம் வந்தால்தான் ஓரளவுக்கு இங்கே நியாயத்தைக் கொண்டுவர முடியும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in