70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடியது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பற்றி மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்தார். ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் வருமான வரம்பைக் கருத்தில் கொள்ளாமல் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதன் மூலம் ஏறத்தாழ 4.5 கோடி குடும்பங்கள், 6 கோடி மூத்த குடிமக்கள் பயன்பெறவுள்ளதாக மத்திய அமைச்சர் குறிப்பிட்டார். இந்தத் திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு ரூ. 5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படவுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா திட்டத்தில் ஏற்கெனவே இடம்பெற்றிருந்தால், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காக ஆண்டுதோறும் கூடுதலாக ரூ. 5 லட்சம் டாப்-அப் செய்யப்படும். இந்தத் தொகையை 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் இந்தத் தொகையைப் பகிர்ந்துகொள்ள முடியாது.