நரேந்திர மோடி இந்து சமுதாயத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதி அல்ல: ராகுல் காந்தி

வாழ்க அரசியலமைப்புச் சட்டம் என்று கூறி மக்களவையில் பேசித் தொடங்கிய ராகுல் காந்தி, அரசியலமைப்புச் சட்டத்தைக் காக்க தொடர்ந்து போராடிவருகிறோம் என்றார்.
நரேந்திர மோடி இந்து சமுதாயத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதி அல்ல: ராகுல் காந்தி
ANI

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசினார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. தன் பேச்சில் பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர் பேசினார்.

பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை மக்களவையில் முன்மொழிந்தார். `ஜெய் சம்விதான்’ (வாழ்க அரசியலைப்புச் சட்டம்) என்று கூறி இந்தத் தீர்மானத்தின் மீது மக்களவையில் பேசித் தொடங்கினார் ராகுல் காந்தி. அப்போது ஜெய் ஸ்ரீராம் என்று முழங்கினார்கள் பாஜக எம்.பி.க்கள்.

`அரசியலமைப்புச் சட்டத்தைக் காக்க தொடர்ந்து போராடிவருகிறோம். அதிகாரம் கிடைக்கவில்லை என்றாலும் எதிர்க்கட்சியாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார். பிறகு இந்து கடவுள் சிவன் படத்தைக் காண்பித்த ராகுல் காந்தி, `சிவனின் இடது கையில் உள்ள திரிசூலம் வன்முறைக்கானது அல்ல, அகிம்சைக்கானது’ என்று குறிப்பிட்டார். அப்போது மக்களவையில் சிவன் படத்தைக் காட்ட அனுமதி இல்லை என்று ராகுல் காந்தியிடம் தெரிவித்தார் சபாநாயகர் ஓம் பிர்லா.

தன் பேச்சைத் தொடர்ந்த ராகுல் காந்தி, `பாஜகவினர் வன்முறை இந்துக்கள், உண்மையான இந்துக்கள் அல்ல’ என்றார். இதைக் கேட்ட பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். உடனே எழுந்த பிரதமர் மோடி, `ராகுல் காந்தியின் பேச்சு ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தின் மீதான தாக்குதல்’ என்று கண்டனம் தெரிவித்தார்.

இதற்கு பதிலடி தரும் விதமாக, ` நரேந்திர மோடி இந்து சமுதாயத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதி அல்ல, ஆர்எஸ்எஸ் இந்து சமுதாயத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதி அல்ல’ என்று முழங்கினார் ராகுல் காந்தி.

இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, `இந்துக்களை அவமதித்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றார். அப்போது ஆளும்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குரல் எழுப்ப ஆரம்பித்தனர். மீண்டும் எழுந்த அமித் ஷா, `நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெறும் வகையில் ராகுல் காந்தி பேசவில்லை’ என்றார். அப்போது பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா `மக்களவையின் மாண்பைக் காக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

`அயோத்தி ராம ஜென்மபூமி பாஜகவுக்கு பாடம் கற்பித்துள்ளது. ராமர் கோவில் திறப்பு விழாவில் அயோத்தி மக்கள் இல்லை; அதானியும் அம்பானியும் இருந்தனர். அயோத்தி அமைந்துள்ள (ஃபைசாபாத்) தொகுதியில் போட்டியிட மோடி 2 முறை முயற்சித்தார். ஆனால் அயோத்தி அமைந்துள்ள தொகுதியில் போட்டியிட வேண்டாம் என்று கணிப்பாளர்கள் மோடியிடம் தெரிவித்தனர்’ என்று அயோத்தி குறித்துப் பேசினார் ராகுல் காந்தி.

அக்னிவீர் திட்டம், நீட் தேர்வு, மணிப்பூர் கலவரம், வேளாண் திருத்தச்சட்டம், உணவுத் தட்டுப்பாடு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்ற பல விஷயங்களைத் தன் பேச்சில் மேற்கோள் காட்டினார் ராகுல் காந்தி. ராகுல் காந்தியின் இந்த உரையின்போது, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பூபேந்தர் யாதவ், அமித் ஷா, கிரண் ரிஜிஜூ போன்றோர் அவ்வப்போது குறிக்கீடு செய்து ராகுல் காந்திக்கு பதிலளித்து வந்தனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in