
கடந்த சட்டப்பேரவை எம்.எல்.ஏ.க்களை ஒப்பிடும்போது மஹாராஷ்டிர, ஜார்க்கண்ட் மாநில புதிய சட்டப்பேரவை எம்.எல்.ஏ.க்களின் சராசரி சொத்து மதிப்பு இரு மடங்கு அதிகரித்துள்ளது மட்டுமல்லாமல், சராசரி வயதும் அதிகரித்துள்ளது.
மக்களவை தேர்தல் முடிவுகளில் சரிவை சந்தித்திருந்தாலும், 234 இடங்களை சட்டப்பேரவை தேர்தலில் வென்று பெரு வெற்றி பெற்றுள்ளது பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சிகளைக் கொண்ட ஆளும் மஹாயுதி கூட்டணி. எதிர்க்கட்சி கூட்டணியான மஹா விகாஸ் அகாதிக்கு 49 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது.
2019 சட்டப்பேரவையில் 51 ஆக இருந்த எம்.எல்.ஏ.க்களின் சராசரி வயது, புதிய சட்டப்பேரவையில் 54 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சட்டப்பேரவையில் பணியாற்றிய பல எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் தேர்வானதே இதற்கான காரணமாக கூறப்படுகிறது. கடந்த முறை தேர்வான 183 எம்.எல்.ஏ.க்கள் புதிய சட்டப்பேரவைக்கு மீண்டும் தேர்வாகியுள்ளனர்.
அதேநேரம் கடந்த சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 22.43 கோடியாக இருந்தது. ஆனால் புதிய சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு ஏறத்தாழ இரு மடங்காகி ரூ. 43.43 கோடி ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த சட்டப்பேரவையில் 24 ஆக இருந்த பெண் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை, புதிய சட்டப்பேரவையில் 22 ஆக குறைந்துள்ளது.
81 இடங்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் 56 இடங்களைக் கைப்பற்றியது இண்டியா கூட்டணி. எதிர்க்கட்சியான பாஜக கூட்டணிக்கு 24 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. அம்மாநிலத்தின் 2019 சட்டப்பேரவையில் 50 ஆக இருந்த எம்.எல்.ஏ.க்களின் சராசரி வயது, புதிய சட்டப்பேரவையில் 53 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம், கடந்த சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 3.87 கோடியாக இருந்தது. ஆனால் புதிய சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு ஏறத்தாழ இரு மடங்காகி ரூ. 6.9 கோடி ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த சட்டப்பேரவையில் 12 ஆக இருந்த பெண் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை, புதிய சட்டப்பேரவையில் 10 ஆக குறைந்துள்ளது.